'பே அக்ரி இன்னோவேஷன்' நிறுவனத்தில் தமிழக அரசு ரூ.8 கோடி முதலீடு
'பே அக்ரி இன்னோவேஷன்' நிறுவனத்தில் தமிழக அரசு ரூ.8 கோடி முதலீடு
ADDED : ஜூலை 27, 2024 02:50 AM

சென்னை:விவசாயிகளிடம் இருந்து மஞ்சள், மக்காச்சோளம் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை நேரடியாக கொள்முதல் செய்து, அவற்றை உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வினியோகம் செய்யும், 'பே அக்ரி இன்னோவேஷன்' நிறுவனத்தில், தமிழக அரசின், வளர்ந்து வரும் துறை ஊக்க நிதியத்தில் இருந்து, 8 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த, தனித்துவமாக செயல்பட கூடிய, வளர்ந்து வரும் புதிய தொழில் நிறுவனங்கள் மற்றும், 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களில், அரசு முதலீடு செய்யும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் 2023 ஜனவரியில் துவக்கி வைத்தார்.
இதற்காக, தமிழகத்தில் வளர்ந்து வரும் துறைகளுக்கான ஊக்க நிதியம் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிதியத்தை, டி.என்.ஐ.எப்.எம்.ஆர்., எனப்படும், தமிழக உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனம் நிர்வகிக்கிறது. நிதியத்தில், தமிழக அரசு, 'டிட்கோ' எனப்படும் தொழில் வளர்ச்சி நிறுவனம், 'டைடல் பார்க்' நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
அந்த நிதியில் இருந்து, வளர்ந்து வரும் துறைகளில் தொழில் துவங்கியுள்ள நிறுவனங்களில், 1 கோடி ரூபாயிலிருந்து, 10 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்படுகிறது.
தற்போது, 'பே அக்ரி இன்னோவேஷன்' நிறுவனத்தில், 8 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனம், இதுவரை 10 நிறுவனங்களில், 50 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
இதுகுறித்து, பே அக்ரி நிறுவனத்தின் நிறுவனர்கள் ராஜீவ் கைமல், கே.வி.எம்.ராஜ்குமார் கூறியதாவது:வங்கியில் பணிபுரிந்த நாங்கள், கடந்த 2017ல், தேனியில் புத்தொழில் நிறுவனமாக, எங்கள் நிறுவனத்தை துவக்கினோம்.தற்போது, தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் உள்ள
விவசாயிகளிடம்பொருட்களை கொள் முதல் செய்கிறோம்.
கடந்த ஆண்டில் நிறுவனத்தின் விற்றுமுதல், 120 கோடி ரூபாயாக இருந்தது. விரைவில் ஆப்ரிக்காவில் உள்ள, 'டோகோ, பெனின், ஐவரி கோஸ்ட்' நாடுகளின் விவசாயிகளிடம் இருந்து கச்சா முந்திரி, சோயாவை கொள்முதல் செய்து, இந்திய நிறுவனங்களுக்கு வழங்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.