தொழில் முனைவோருக்கான திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு ஆய்வு
தொழில் முனைவோருக்கான திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு ஆய்வு
ADDED : ஆக 03, 2024 12:10 AM

சென்னை: 'நீட்ஸ்' தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம், அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் முயற்சியில் தமிழக அரசு இறங்கி உள்ளது.
தமிழகத்தில் சிறு தொழில் நிறுவனங்கள் துவக்குவதை ஊக்குவிக்க, 'நீட்ஸ்' எனப்படும் புதிய தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம், அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் என, பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இத்திட்டங்களின் பயனாளிகளுக்கு, மானியத்துடன் கூடிய கடன்கள் கிடைக்க உதவி செய்யப்படுகிறது.
அப்படி கடன் உதவி பெற்று, தொழிலை துவக்கிய தொழில்முனைவோர், அடுத்த கட்டத்திற்கு முன்னேறி உள்ளனரா; அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன என்பது தொடர்பாக, அரசு ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
இதுகுறித்து, தமிழக தொழில் வணிக ஆணையர் எல்.நிர்மல்ராஜ் கூறியதாவது:
தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம் துவக்கி, பல ஆண்டுகள் ஆகின்றன. எனவே, அத்திட்டத்தின் கீழ், குறுந்தொழில் துவக்கிய நிறுவனங்கள், தற்போது அடுத்த கட்டமாக சிறு, நடுத்தர தொழில்களாக வளர்ந்துள்ளன என்பது குறித்தும், அவை சந்திக்கும் சிக்கல்கள் குறித்தும் கேட்டறிந்து, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இதேபோல், கடந்த ஆண்டில் துவக்கப்பட்ட அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தின் கீழ் தொழில் துவங்கிய நிறுவனங்களின் செயல்பாடுகள், அவை சந்திக்கும் பிரச்னைகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டிஉள்ளது.
இதற்காக, இந்த இரு திட்டங்களின் கீழ் பயனடைந்தவர்களை சந்தித்து, தகவல்கள் திரட்டப்படும். அதற்கு ஏற்ப, அந்நிறுவனங்களுக்கு தேவைப்படும் உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.