ADDED : ஆக 14, 2024 11:50 PM

மும்பை: எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான 'ஏத்தர் எனர்ஜி' நிறுவனம், 'யுனிகார்ன்' அந்தஸ்து பட்டியலில் இணைந்துள்ளது.
ஒரு பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது 8,300 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பை கொண்டிருக்கும் புத்தொழில் நிறுவனங்கள் 'யுனிகார்ன்' என்றழைக்கப்படுகிறது.
மும்பையை தலைமையிடமாகக் கொண்ட மத்திய அரசுக்கு சொந்தமான என்.ஐ.ஐ.எப்., எனப்படும், தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதி அமைப்பு, ஏத்தர் நிறுவனத்தின் 8 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இந்நிலையில், மேலும் 600 கோடி ரூபாயை ஏத்தர் நிறுவனத்தில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இந்த முதலீடு வாயிலாக, 10,900 கோடி ரூபாய் மதிப்புடன் ஏத்தர் எனர்ஜி நிறுவனம், யுனிகார்ன் அந்தஸ்தை பெற்றுள்ளது.
கடந்த ஜூனில், 'ஹீரோ மோட்டோகார்ப்' நிறுவனம், இந்நிறுவனத்தின் கூடுதல் பங்குகளை வாங்கிய போது, ஏத்தர் நிறுவனத்தின் மதிப்பு 5,630 கோடி ரூபாயாக இருந்தது. 43.94 சதவீத பங்குகளை வைத்துள்ள ஹீரோ மோட்டோகார்ப், ஏத்தர் நிறுவனத்தை தன் கூட்டு நிறுவனமாக குறிப்பிடுகிறது.
கடந்த 2023ம் ஆண்டு, ஐ.ஐ.டி., மெட்ராஸ் மாணவர்கள் தருண் மேக்தா, ஸ்வப்னில் ஜெயின் ஆகியோரால், ஏத்தர் எனர்ஜி நிறுவனம் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.