தமிழகத்தில் ரூ.2,000 கோடி முதலீடு: அமெரிக்க நிறுவனம் 'ட்ரில்லியன்ட்' ஒப்புதல்
தமிழகத்தில் ரூ.2,000 கோடி முதலீடு: அமெரிக்க நிறுவனம் 'ட்ரில்லியன்ட்' ஒப்புதல்
ADDED : செப் 06, 2024 02:44 AM

சென்னை:தமிழகத்தில் 2,000 கோடி ரூபாய் முதலீட்டில், 'வளர்ச்சி மற்றும் உலகளாவிய உற்பத்தி மையம்' அமைக்க, தமிழக அரசுடன், 'ட்ரில்லியன்ட்' நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், முன்னணி தொழில் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து வருகிறார். இதுவரை 1,500 கோடி ரூபாய் முதலீட்டில், தொழில் துவங்க 10 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதில், 5,100 பேருக்கு, வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேம்பட்ட அளவீட்டு உள்கட்டமைப்பு, ஸ்மார்ட் நகரங்கள் ஆகியவற்றுக்கான தீர்வுகளை வழங்கும், முன்னணி நிறுவனமான, ட்ரில்லியன்ட் நிறுவனத்துடன் நேற்று முன்தினம் சிகாகோவில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிறுவனம் தமிழகத்தில் 2,000 கோடி ரூபாய் முதலீட்டில், வளர்ச்சி, உலகளாவிய உதவி மையம் மற்றும் உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கு முன்வந்துள்ளது.
முதலீடு செய்ய அழைப்பு
விளையாட்டு காலணிகள், ஆடைகள் தயாரிப்பில் உலகின் மிகப்பெரிய நிறுவனமான 'நைக்'கின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழகத்தில் புதிதாக முதலீடு செய்ய முதல்வர் அழைப்பு விடுத்தார்.
தோல் அல்லாத காலணிகள் உற்பத்தியை விரிவுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள்; ஆடைகள் உற்பத்திக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவது; தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், திறன் கூட்டாண்மையுடன் இணைந்து செயல்படுவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதேபோல், 'ஆப்டம்' நிறுவன உயர் அலுவலர்களை சந்தித்த முதல்வர், தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.