ADDED : பிப் 14, 2025 11:51 PM

புதுடில்லி:உணவுப் பொருட்களின் விலை குறைந்ததால், கடந்த ஜனவரி மாதத்தில், மொத்த விலை பணவீக்கம் 2.31 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது, கடந்தாண்டு டிசம்பரில் 2.37
சதவீதமாக இருந்தது.
ஜனவரி மாதத்துக்கான சில்லரை விலை பணவீக்கம் குறைந்த நிலையில், தற்போது மொத்த விலை பணவீக்கமும் குறைந்துள்ளது. அறுவடைக்குப் பின் சந்தைகளுக்கு உணவு தானியங்களின் வரத்து அதிகரிக்கத் துவங்கியுள்ளதால், வரும் நாட்களில் உணவுப் பொருட்களின் விலை மேலும் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த டிசம்பரில் 8.47 சதவீதமாக இருந்த உணவுப் பொருட்கள் பிரிவு பணவீக்கம், ஜனவரியில் 5.88 சதவீதமாக குறைந்துள்ளது. காய்கறிகள், அரிசி, முட்டை, இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றில் பணவீக்கம் குறைந்ததே இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதே நேரத்தில் தானியங்கள், கோதுமை, பருப்பு, வெங்காயம் மற்றும் பால் ஆகியவற்றில் பணவீக்கம் அதிகரித்திருந்தது. எரிசக்தி மற்றும் மின்சார பிரிவில் தொடர்ந்து பணவாட்டமே நிலவியது.