1,000 மெகா வாட் 'பேட்டரி ஸ்டோரேஜ்' மத்திய அரசிடம் நிதியுதவி எதிர்பார்ப்பு
1,000 மெகா வாட் 'பேட்டரி ஸ்டோரேஜ்' மத்திய அரசிடம் நிதியுதவி எதிர்பார்ப்பு
ADDED : டிச 07, 2025 01:29 AM

சென்னை : தமிழகத்தில் சூரியசக்தி மின்சாரத்தை சேமிக்கும், 'பேட்டரி ஸ்டோரேஜ்' அமைக்க ஒரு மெகா வாட்டிற்கு, 18 லட்சம் ரூபாய் என, 1,000 மெகா வாட்டுக்கு நிதியுதவி வழங்குமாறு மத்திய அரசை, மின்சார வாரியம் வலியுறுத்தியுள்ளது.
நாட்டில் காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின் நிலையங்கள் அமைக்க, தமிழகத்தில் சாதகமான காலநிலை நிலவுகிறது.
தற்போது, புதுப்பிக்கத்தக்க மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் உடனுக்குடன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருப்பது போல் அந்த மின்சாரத்தை, 'பேட்டரி ஸ்டோரேஜ்' கட்டமைப்பில் சேமித்து, பின்னர் பயன்படுத்தும் தொழில்நுட்பம் நம் நாட்டிலும் தற்போது வர துவங்கியுள்ளது.
பசுமை மின்சார சேமிப்பு கட்டமைப்புக்கு அதிக செலவாகிறது.எனவே, ஒரு மெகா வாட் பேட்டரி ஸ்டோரேஜ் திட்டத்துக்கான மூலதன செலவில், 30 சதவீதம் வரை மத்திய அரசு நிதியுதவி வழங்குகிறது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் ஏற்கனவே, 3,000 மெகா வாட் பேட்டரி ஸ்டோரேஜ் திட்டத்துக்கு நிதியுதவி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கூடுதலாக, 1,000 மெகா வாட் பேட்டேரி ஸ்டோரேஜ் திட்டத்தை செயல்படுத்த, ஒரு மெகா வாட்டிற்கு, 18 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குமாறு மத்திய அரசிடம் கேட்கப்பட்டு உள்ளது.
பேட்டரி ஸ்டோரேஜ் அ மைக்கும் நிறுவனத்திடம் பகலில் உற்பத்தியாகும் சூரியசக்தி மின்சாரம் வழங்கப்பட்டு சேமிக்கப்படும். அந்த மின்சாரம் இரவில் ஏற்படும் மின் தேவையை பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படும்.
மின்சாரத்தை சேமித்து, மீண்டும் வினியோகிக்க ஒப்பந்த நிறுவனத்துக்கு மெகா வாட்டிற்கு சராசரியாக, 2.50 லட்சம் ரூபாய் கட்டணமாக வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

