ADDED : டிச 30, 2024 11:50 PM

சென்னை : உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததில், 2,140 சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், மாநிலம் முழுதும் 21,660 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில்களை துவங்கியுள்ளன.
தமிழக அரசு பல்வேறு நிறுவனங்களின் தொழில் முதலீடுகளை ஈர்க்க, இந்தாண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது. அதில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பிரிவில், 5,068 நிறுவனங்கள் வாயிலாக, 63,573 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க, அரசு ஒப்பந்தம் செய்தது.
இதற்காக, தொழில் துறை அதிகாரிகள், மாவட்டங்கள் தோறும் சிறப்பு கூட்டங்களை நடத்தி, மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் துவங்க, அரசு துறைகளின் அனுமதி, வங்கி கடன் ஆகியவற்றுக்கு உதவி வருகின்றனர்.
இதன் வாயிலாக, அந்நிறுவனங்களும் தொழில்களை துவக்கி வருகின்றன. இதுவரை, 2,140 நிறுவனங்கள், 21,660 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில்களை துவங்கியுள்ளன.
அவற்றில், 1,663 நிறுவனங்கள் உற்பத்தி சார்ந்த பிரிவிலும்; 477 நிறுவனங்கள் சேவை சார்ந்த பிரிவிலும் தொழில்களை துவக்கியுள்ளன. இவற்றின் வாயிலாக, 78,500 வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.