ADDED : மார் 19, 2024 10:03 AM

புதுடில்லி : கடந்த 2013-14 முதல் 2022-23 வரையிலான காலகட்டத்தில், நாட்டில் மண்ணெண்ணெய் நுகர்வு, ஆண்டு கூட்டு வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் 26 சதவீதம் சரிந்துள்ளதாக, மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.
துாய்மையான எரிசக்தி பயன்பாடு தொடர்பாக அரசு எடுத்த பல்வேறு கொள்கை ரீதியான முடிவுகளே, இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், தேசிய புள்ளியியல் அலுவலகம் 'எரிசக்தி புள்ளியியல் இந்தியா 2024' என்ற அறிக்கையை வெளியிட்டது.
அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
எரிசக்தி தொடர்பான அரசின் சமீபத்திய கொள்கை முடிவுகளின் பிரதிபலிப்பை, நாட்டில் குறைந்துள்ள மண்ணெண்ணெய் நுகர்வின் வாயிலாக காணமுடிகிறது.
கடந்த 2013-14 முதல் 2022-23 வரையிலான காலகட்டத்தில், நாட்டில் மண்ணெண்ணெய் நுகர்வு, ஆண்டு கூட்டு வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் 25.78 சதவீதம் சரிந்து உள்ளது.
பெட்ரோலிய பொருட்களிலேயே அதிகபட்சமாக 38.52 சதவீதம் நுகரப்படும் டீசல், கடந்த 2022 - 23ம் ஆண்டு 12.05 வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த 2021 - 22ல் 7.67 கோடி டன்களாக இருந்த டீசலின் நுகர்வு 2022 - 23ல் 8.59 கோடி டன்களாக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் பெட்ரோலின் நுகர்வு 13.38 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
எனினும், இயற்கை எரிவாயுவின் நுகர்வு ஏற்ற இறக்கங்களை கண்டது. இயற்கை எரிவாயுவின் பெரும்பான்மையான பயன்பாடு உரங்கள் தொழிலிலேயே இருந்தது. ஒட்டுமொத்தமாக இயற்கை எரிவாயு, எரிசக்தி நோக்கங்களுக்காக 62 சதவீதமும், எரிசக்தி அல்லாத பிற நோக்கங்களுக்காக 38 சதவீதமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2012 - 13ல் 8.24 லட்சம் ஜிகாவாட் ஆக இருந்த மின்சார நுகர்வு, 2021 - 22ல் 12.96 லட்சம் ஜிகாவாட் ஆக அதிகரித்துள்ளது.
மொத்த மின்சார நுகர்வில் 41.16 சதவீதத்துடன் தொழில்துறை முக்கிய பங்கு வகித்துள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

