பாம்புக்கடி மருந்து தயாரிப்பு ஆலை அமைக்க 3 நிறுவனங்கள் விருப்பம்
பாம்புக்கடி மருந்து தயாரிப்பு ஆலை அமைக்க 3 நிறுவனங்கள் விருப்பம்
UPDATED : ஆக 14, 2025 10:44 AM
ADDED : ஆக 14, 2025 02:00 AM

சென்னை: தமிழகத்தில் பாம்புக்கடியை குணப்படுத்தும் விஷமுறிவு மருந்து தயாரிப்பு ஆலையை, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனத்துடன் இணைந்து அமைக்க, மூன்று நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.
* இந்தியாவில் பாம்புக்கடியால் ஆண்டுதோறும் சராசரியாக, 60,000 பேர் உயிரிழக்கின்றனர்.
* பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, 'ஆன்டிவெனோம்' எனப்படும் பாம்புக்கடி விஷமுறிவு மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்தை தயாரிக்கும் ஆலைகள், மஹாராஷ்டிரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ளன.
அதுவும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளன. தமிழகத்தில் உள்ள இருளர் பாம்பு பிடிப்போர் தொழிற்கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், பாம்புகளில் இருந்து விஷத்தை எடுத்து, விஷமுறிவு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்கின்றனர்.
எனவே, தமிழகத்திலேயே பாம்புக்கடிக்கு எதிரான விஷமுறிவு மருந்து தயாரிக்கும் ஆலை அமைக்க, டிட்கோ முடிவு செய்துள்ளது. இதற்கு, கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்ய, கடந்த மாதம் அழைப்பு விடுத்தது; அதில், மூன்று நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.
இந்நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, விரைவில் ஆலை அமைக்கும் பணிகளை துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது.