கண்டுபிடிப்பாளர்கள் பயனடைய முதலீட்டாளர் சந்திப்புக்கு ஏற்பாடு
கண்டுபிடிப்பாளர்கள் பயனடைய முதலீட்டாளர் சந்திப்புக்கு ஏற்பாடு
ADDED : ஆக 14, 2025 09:58 PM

சென்னை:சென்னையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தில், காப்புரிமையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தில், அறிவுசார் சொத்துரிமை தொடர்பான விளக்கங்களும், வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகின்றன. ஏற்கனவே காப்புரிமை பெற்ற, 'எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல்' துறைகள் சார்ந்த, 77 கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் அந்தந்த துறைகளை சேர்ந்த முதலீட்டாளர்களை ஒருங்கிணைத்து, தொழில் துவங்குவதற்கான நடவடிக்கையில், முதல்முறையாக, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம் ஈடுபட்டது.
இதுகுறித்து, மன்றத்தின் உறுப்பினர் செயலர் வின்சென்ட் கூறியதாவது:
முதல்முறையாக இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில், கண்டுபிடிப்பாளர்களுடன் முதலீட்டாளர்கள் உரையாடி, தங்களின் தேவை குறித்தும், அதற்கேற்ப கண்டுபிடிப்புகளை மாற்றித் தரும்படியும் வலியுறுத்தினர்.
அடுத்தகட்டமாக, மேம்படுத்தப்பட்ட கண்டுபிடிப்புகளுடன் காப்புரிமையாளர்களும், புரிந்துணர்வு செய்யும் முடிவுடன் முதலீட்டாளர்களும் சந்திக்க உள்ளனர். இதனால், நாட்டில் தொழில் வளர்ச்சி மேம்படுவதுடன், கண்டுபிடிப்பாளர்களும் பயன் அடைவர்.
இவ்வாறு அவர் கூறினார்.