அரசிடம் முதலீடு பெற ஆர்வம் 650 நிறுவனங்கள் விண்ணப்பம்
அரசிடம் முதலீடு பெற ஆர்வம் 650 நிறுவனங்கள் விண்ணப்பம்
ADDED : நவ 14, 2024 11:11 PM

சென்னை:தமிழகத்தைச் சேர்ந்த, தனித்துவமாக செயல்படக் கூடிய வளர்ந்து வரும் புதிய நிறுவனங்கள் மற்றும் 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களில், தமிழக அரசு முதலீடு செய்யும் திட்டம், 2023 ஜனவரியில் துவக்கப்பட்டது.
இதற்காக, 'தமிழக எமெர்ஜிங் செக்டார் சீடு பண்டு' எனப்படும் ஊக்க நிதியம் ஏற்படுத்தப்பட்டது. இதில், தமிழக அரசின், 'டிட்கோ' எனப்படும் தொழில் வளர்ச்சி நிறுவனம், 'டைடல் பார்க்' உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. நிதியத்தை, டி.என்.ஐ.எப்.எம்.ஆர்., எனப்படும் தமிழக உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனம் நிர்வகிக்கிறது.
வளர்ந்து வரும் துறைகளில் தொழில் துவங்கியுள்ள நிறுவனங்களில், நிதி தேவைப்படும் நிறுவனங்கள், அதை பெற, அரசு நிதியத்தில் விண்ணப்பிக்கலாம். அதை பரிசீலித்து, ஒரு நிறுவனத்தில், 1 கோடி முதல், 10 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்படுகிறது. இதுவரை, 650 நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ளன.
அவற்றில், 10 நிறுவனங்களில் 50 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற நிறுவனங்களின் விண்ணப்பங்களை வல்லுனர் குழு பரிசீலித்து வருகிறது. சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.