ADDED : ஆக 03, 2025 01:15 AM

மும்பை:இன்னும் 6,017 கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2023 மே மாதம் 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. பொதுமக்கள் அவற்றை வங்கிகளில் டிபாசிட் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஜூலை 31ம் தேதி நிலவரப்படி, 98.31 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பியுள்ளதாகவும், 6,017 கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டபோது, 3.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. தற்போது 1.69 சதவீத நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன.
சென்னை உட்பட நாடு முழுதும், ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் மட்டுமே 2,000 ரூபாய் நோட்டுகள் வாங்கிக் கொள்ளப்படுகின்றன. பொதுமக்கள், தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்பி, தங்களது வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.