சிறுதொழில் முதலீடுகளை கண்காணிக்க குழு அமைச்சர் தலைமையில் 10 துறையினர் பங்கேற்பு
சிறுதொழில் முதலீடுகளை கண்காணிக்க குழு அமைச்சர் தலைமையில் 10 துறையினர் பங்கேற்பு
ADDED : அக் 08, 2024 11:05 PM

சென்னை:உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் துவங்குவதை கண்காணிக்க, அமைச்சர் அன்பரசன் தலைமையில், 10 துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க, சென்னையில் இந்தாண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை மாநில அரசு நடத்தியது.
பல்வேறு நிறுவனங்கள் வாயிலாக, 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் அதில் ஈர்க்கப்பட்டன.
அவற்றில், 5,068 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன், 63,573 கோடி ரூபாய் முதலீடு திரட்டும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.
புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த பெரிய நிறுவனங்கள், தொழில் துவங்குவதை கண்காணிக்க, தொழில் துறை அமைச்சர் ராஜா தலைமையில், முக்கிய துறைகளின் செயலர்கள் உட்பட, 17 பேர் அடங்கிய சிறப்பு குழு நியமிக்கப்பட்டது.
தற்போது, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவில் முதலீடு செய்த நிறுவனங்கள், தொழில் துவங்குவதை கண்காணிக்க, அந்த துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில், 10 துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை அரசு நியமித்துள்ளது.
தொழில் நிறுவனங்களுடன் அவ்வப்போது இக்குழு பேச்சு நடத்தி, அவற்றுக்கு தேவைப்படும் அரசுத் துறைகளின் அனுமதி, உரிமம் ஆகியவை விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கும்.
தொழில் துவங்குவதில் உள்ள சிக்கல் குறித்து, முதலீட்டாளர்களிடம் கருத்து கேட்டு, தீர்வு காணவும் குழு நடவடிக்கை எடுக்கும்.
உலக முதலீட்டாளர் மாநாட்டில், ரூ.6.64 லட்சம் கோடிக்கு முதலீடு ஈர்ப்பு
ரூ.63,573 கோடி முதலீடுக்கு 5,068 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஒப்பந்தம்
பெருநிறுவனங்கள் தொழில் துவங்குவதற்கு உதவ, 17 பேர் குழு அமைப்பு
கடந்த 8 மாதங்களில், ரூ.17,800 கோடி முதலீட்டில், 1,800 நிறுவனங்கள் உற்பத்தி துவக்கின.