ஆயிரம் சந்தேகங்கள்: 'காப்பீடு பிளஸ் முதலீடு' நல்ல திட்டம்தானா?
ஆயிரம் சந்தேகங்கள்: 'காப்பீடு பிளஸ் முதலீடு' நல்ல திட்டம்தானா?
ADDED : பிப் 19, 2024 12:55 AM

பத்து ஆண்டுகளுக்கு முன் என் மகளின் கல்விக்கடனுக்காக ஒரு லட்சம் ரூபாயை வங்கியில் பெற்றோம். படித்து முடித்து வேலை கிடைத்தவுடன் பத்தே மாதத்தில் கடனை அடைத்துவிட்டோம். கடன் பெற்ற காலத்தில் கல்விக்கடனுக்கு நுாறு சதவிகித வட்டி மானியம் அளிப்பதாக மத்திய அரசின் மனிதவளத் துறை அறிவித்தது. அதன்படி கடன் வழங்கிய வங்கியானது, மத்திய அரசிடமிருந்து வட்டியை பெற்றுக்கொண்டது. ஆனால் இப்போது 30,000 ரூபாய் பாக்கி உள்ளதாக வங்கியில் கூறுகிறார்கள். காரணம் கேட்டபோது, 2013---14ல் பட்டியலின மாணவர்களுக்கு மட்டுமே மானியம் வழஙகப்பட்டதாகவும்; நிதி பற்றாக்குறையினால் இதர பிற்படுத்தப்பட்ட மாணாக்கருக்கு மானியம் இல்லை என்றும் அறிவிப்பு வங்கிக்கு வந்ததாகவும்; அந்த ஓராண்டு மானியம் தான் இப்போது வளர்ந்துள்ளது என்றும் கூறினார்கள். கடந்த பத்தாண்டுகளில் இதைப் பற்றி எதுவும் சொல்லாமல் இப்போது திடீரென பணம் செலுத்தச் சொல்வது நியாயமா?
கோ.பரங்கிரிநாதன்
பரவை, மதுரை.
வங்கி தன் வேலையை தாமதமாக செய்துள்ளது என்பது தான் பிரச்னை. எப்போது வட்டி மானியம் கிடையாது என்ற தகவல் அவர்களுக்குக் கிடைத்தது? எப்போது அதை உங்களுக்குத் தெரிவித்தார்கள்? முன்னதாகவே தெரிவிக்கப்பட்டு இருந்தால், வட்டி, வட்டிக்கு வட்டி என்று உங்கள் மீது சுமை ஏற்றப்பட்டிருக்காது. அதனால், அந்த வங்கியின் நோடல் அலுவலருக்கு விரிவாக புகார் எழுதுங்கள்.
இதில் எங்கள் பிழை ஏதுமில்லை; வட்டி, கூட்டு வட்டி இவற்றைத் தள்ளுபடி செய்ய வேண்டும். அப்போது என்ன வட்டி மானியம் எனக்கு அளிக்கப்பட்டதோ, அதை மட்டும் திரும்பச் செலுத்துகிறேன். வங்கியின் தாமதமே இந்தப் பிரச்னைக்கு காரணம் என்பதை விளக்கிச் சொல்லுங்கள். ஓரளவுக்கேனும் உங்களுக்கு பரிகாரம் கிடைக்கும்.
என்னுடைய வயது 35. நான் அரசு ஊழியர். இன்னும் திருமணம் ஆகவில்லை. நான் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பது அவசியமா? என்னுடைய சேமிப்பு பணத்தை நான் எந்த வகையான முதலீட்டில் முதலீடு செய்வது? பங்குச் சந்தையிலா? மியூச்சுவல் பண்டிலா?
எம்.சொக்கன், மதுரை.
ஆம், டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பது அவசியம். நீங்கள் இப்படியே இருந்துவிடப் போவதில்லை. உங்களுக்கும் ஒரு குடும்பம் வரும். அவர்களது எதிர்கால பாதுகாப்புக்கு காப்பீடு தேவை.
உங்கள் வயதுக்கு நீங்கள் துணிந்து பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். அதற்கு முன், உங்கள் வாழ்க்கை இலக்குகள் என்னென்ன என்பதை எழுதுங்கள்.
திருமணம், குழந்தைகள், அவர்கள் கல்வி, கார், வீடு, வெளிநாட்டு சுற்றுலா... என்றெல்லாம் உங்களுக்கு சில சிறகடிக்கும் கனவுகள், கற்பனைகள் இருக்குமில்லையா? அந்தக் கனவுகளின் பட்டியலைத் தயார் செய்துகொள்ளுங்கள். அவைதான் உங்கள் இலக்குகள். அவற்றை அடைவதற்கான காலகட்டத்தையும் குறித்துக்கொள்ளுங்கள்.
இவற்றை அடைவதற்கு ஏற்ப, முதலீடு செய்யத் துவங்குங்கள். கையில் எப்போதும் அவசர கால தேவைக்கு என்று ஆறு மாத செலவுகளுக்கு உண்டான பணத்தை வைத்துக்கொண்டு முதலீடு செய்யுங்கள். முதலில், மியூச்சுவல் பண்டில் இருந்து துவங்குங்கள். பின்னர் துணிச்சலும், தெளிவும் வந்தபின், பங்குச் சந்தைக்குள் நுழையலாம்.
பொதுத்துறை வங்கி வாயிலாக 'காப்பீடு பிளஸ் முதலீடு' தொடர்பான விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்குமா? முதலீடு செய்யலாமா?
கே.பூபதி, சேலம்.
காப்பீடு பிளஸ் முதலீடு என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. காப்பீடு வேறு, முதலீடு வேறு. ஒரு நபர் தன் மரணத்தினால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவதற்கு, தன் குடும்பத்துக்கு செய்யும் முன்னேற்பாடு தான் காப்பீடு என்பது.
ஆனால், ஒருசிலருடைய எண்ணம் வேறானது. இத்தனை ஆண்டுகள் பிரீமியம் கட்டிவிட்டேன், எனக்கு எந்த விபத்தோ, ஆபத்தோ ஏற்படவில்லை, செளக்கியமாக இருக்கிறேன். கட்டிய பணத்தை திருப்பித் தரலாமே என்ற கேள்வி எழுகிறது. இத்தகையவர்களுடைய ஆசையை நிறைவேற்றுவதற்காகவே காப்பீடு பிளஸ் முதலீடு திட்டங்களை பல நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன.
ஆனால், இதில் உள்ள சிக்கலை சொல்லிவிடுகிறேன். காப்பீடு நிறுவனங்கள் முதலீட்டு தொழிலைச் செய்யும்போது, அதற்கு உரிய கட்டணங்களை கழித்துக்கொண்டு, மீதி தொகையைத் தான் முதலீடு செய்கின்றன. இவையெல்லாம் அதன் குறிக்கோளுக்கு ஏற்ப, 'மிட்கேப்' அல்லது 'ஸ்மால் கேப்' நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகின்றன.
இத்தகைய கலவையான முதலீட்டுத் திட்டத்தை விட, நேரடியாக மிட்கேப் அல்லது ஸ்மால் கேப் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யும்போது, பெறக்கூடிய வருவாய் அதிகம். முதலீடை முதலீடாகவும், காப்பீடை காப்பீடாகவும் மேற்கொள்வதே நல்லது.
தற்போது மூத்த குடிமக்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை பழைய முறையிலும், ஏழு லட்சம் ரூபாய் வரை புதிய திட்டத்திலும் வருமான வரி கிடையாது. ஆனாலும் கூட, வங்கியிலிருந்து வட்டி வருமானம் மாத்திரம் பெறுபவர்களுக்கு, அந்த வட்டி வருமானம் இரண்டரை லட்சம் ரூபாய்க்கும் அதிகமானால், படிவம் 15 எச். கொடுத்தாலும், அதனை ஏற்றுக் கொள்ளாமல், 10 சதவீதம் டி.டி.எஸ். கட்டாயமாக பிடிக்கப்படுகிறதே? இது சரியான முறைதானா? மூத்த குடிமக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை மனத்தில் கொண்டு, சாப்ட்வேர் இயக்க முறையில், ஏதும் செய்ய முடியாதா?
பி.ஆர்.சீனிவாசன், சென்னை-.
சரி, சரியல்ல என்பதல்ல விஷயம். வங்கியாளர்கள் தமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டதை பின்பற்றுகிறார்கள், அவ்வளவுதான். நீங்கள் முன்வைக்கும் ஆலோசனை நியாயமானது தான். மென்பொருளைக் கொண்டு எவ்வளவோ செய்யலாம்.
ஐ.டி.ஆர். தாக்கல் செய்யும்போது, எப்படியிருந்தாலும் உங்கள் டி.டி.எஸ். பணம் திரும்பிவிடும். ஆனால், முதலில் கட்டுவானேன், அப்புறம் அதை ரீபண்டு வாங்குவானேன் என்று நீங்கள் யோசிப்பது சரிதான். உங்கள் கருத்தைப் பிரசுரித்துவிட்டோம். உரியவர்களின் கவனத்துக்குப் போகும் என்று நம்புகிறோம்.
உரிய காலத்துக்கு முன்னால் வைப்பு நிதியை முறிக்கப் போனால், அபராதம் விதிக்கிறார்களே? என் பணத்தைத் தானே நான் எடுக்கிறேன்?
ஆ.செந்தில்நாதன், சென்னை.
வங்கிகளிலும், வங்கியல்லாத நிதி நிறுவனங்களிலும் இது நடக்கிறது. பொதுவாக, உரிய காலத்துக்கு முன்பாக வைப்பு நிதியை முறித்தால், வைப்பு நிதியில் அரை சதவீதம் முதல் ஒன்றரை சதவீதம் வரை அபராதமாக பிடிக்கிறார்கள். வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் இரண்டு முதல் மூன்று சதவீதம் வரை கூட பிடித்தம் செய்கிறார்கள்.
வைப்பு நிதி போட்ட மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் அந்த நிதியை முறித்தால், வட்டியே கிடையாது. பணத்தை வைப்பு நிதியாக போடப் போகும்போது, அவர்கள் தரக்கூடிய வட்டியின் மீது தான் கவனம் இருக்கிறதே தவிர, ஒருவேளை, நாளை இதனை முறிக்க வேண்டியிருந்தால், எவ்வளவு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை முதலீட்டாளர்கள் கவனிப்பதில்லை.
ஆனால், வங்கிகள் உஷாராக இருக்கின்றன. வைப்பு நிதிக்கான படிவத்திலேயே இந்த அபராத விபரங்கள் கொடுக்கப்பட்டு, வாடிக்கையாளரிடம் ஒப்புதலும் பெறப்பட்டு இருக்கும். அப்போது இது நம் கண்களில் படுவதில்லை. அவசரத் தேவைக்காக, வைப்பு நிதியை முறிக்கப் போகும் போதுதான், நமக்கு இந்த பேரிடி காத்திருக்கும்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com ph:98410 53881

