இருசக்கர வாகனங்களில் ஜன., 1 முதல் ஏ.பி.எஸ்., வசதி கட்டாயமாகிறது வாகன நிறுவனங்கள் கோரிக்கைக்கு 'நோ'
இருசக்கர வாகனங்களில் ஜன., 1 முதல் ஏ.பி.எஸ்., வசதி கட்டாயமாகிறது வாகன நிறுவனங்கள் கோரிக்கைக்கு 'நோ'
ADDED : அக் 25, 2025 12:01 AM

புதுடில்லி: வாகன ஓட்டுநர்கள் பாதுகாப்பு கருதி, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் உற்பத்தியாகும் அனைத்து இருசக்கர வாகனங்களுக்கும் ஏ.பி.எஸ்., பிரேக் அமைப்பை கட்டாயமாக்குவதாக மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில், இதை 125 சி.சி.,க்கு கீழ் உள்ள இருசக்கர வாகனங்களில் அமல்படுத்த, கால நீட்டிப்பு கேட்டு வாகன நிறுவனங்கள் பலமுறை கோரிக்கை வைத்தன.
இருப்பினும், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், ஏ.பி.எஸ்., அமைப்பு அமலாகும் தேதியில் எந்த மாற்றமும் இல்லை என பதிலளித்து உள்ளது. அண்மையில் இருசக்கர வாகன நிறுவனங்களுக்கும், சாலை போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளுக்கும் இடையே சந்திப்பு நடந்தது.
இதில், ஓட்டுநர் பாதுகாப்பு விதிமுறைகளை மாற்றி அமைக்க முடியாது என்றும், ஏ.பி.எஸ்., அமைப்பை சேர்ப்பதால் ஏற்படும் விலை அதிகரிப்பை நிறுவனங்களால் சமாளிக்க முடியும் என்றும், அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், வாகன விலையை நிறுவனங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
ஏ.பி.எஸ்., அமைப்பால், வாகன விலை சராசரியாக 5,000 முதல் 6,000 ரூபாய் வரை உயரும் என்றும், இது கிராமப்புற இருசக்கர வாகன விற்பனையை பாதிக்கும் என்றும், வாகன நிறுவனங்கள் கவலை தெரிவித்தன.
ஆனால், வாகன விலை அதிகரிக்கும் என்ற காரணத்தால், ஓட்டுநர் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது; புதிய ஜி.எஸ்.டி., காரணமாக, 350 சி.சி.,க்கு குறைவான இருசக்கர வாகனங்களின் விலை குறைந்துள்ளது என அமைச்சகம் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
இந்தியாவில் விற்பனையாகும் மொத்த இருசக்கர வாகனங்களில், 125 சி.சி.,க்கு குறைவான வாகனங்களின் பங்கு மட்டும் 85 சதவீதம். இப்பிரிவில் அதிக சந்தை பங்கை வைத்துள்ள ஹீரோ நிறுவனத்திற்கு, விற்பனையில் கணிசமாக பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.
ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில், 125 சி.சி.,க்கு குறைவான பைக்குகளில், பின்புற பிரேக்கை மிதித்தால், இரு பிரேக்குகளும் பிடிக்கும் வகையில், 'காம்பி' பிரேக் அமைப்பு வழங்கப்படுகிறது.
அதேபோல், இந்திய வாடிக்கையாளர்களுக்கு 'காம்பி' பிரேக் அமைப்பு போதுமான பாதுகாப்பை வழங்கும் என, வாகன நிறுவனங்கள் நினைப்பதாக கூறப்படுகிறது.
பிரேக் பிடித்தாலும் இருசக்கர வாகனத்தின் சக்கரங்கள் லாக் ஆகாது குறிப்பிடத்தக்க அளவில் விபத்தை குறைக்கும், ஈரமான பாதைகளில் திடீர் பிரேக் பிடித்தாலும் விழாமல் தடுக்கும்

