அமெரிக்காவுடன் கடன் ஒப்பந்தம் முறித்தது 'அதானி' குழுமம் கொழும்பு துறைமுக விவகாரம்
அமெரிக்காவுடன் கடன் ஒப்பந்தம் முறித்தது 'அதானி' குழுமம் கொழும்பு துறைமுக விவகாரம்
ADDED : டிச 12, 2024 01:03 AM

புதுடில்லி:இலங்கையில் அமைத்து வரும் துறைமுகத்துக்கு கடன் பெற, அமெரிக்க அரசின் நிதி அமைப்புடன் மேற்கொண்டிருந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியுள்ளதாக, அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
இலங்கை கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் மேம்பாட்டுப் பணிகளை அதானி குழுமம் மேற்கொண்டு வருகிறது.
இலங்கையைச் சேர்ந்த 'ஜான் கீல்ஸ்' குழுமம் மற்றும் இலங்கை துறைமுக ஆணையத்துடன் இணைந்து, இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே, முனையத்தின் கட்டுமானம், மேம்பாடு மற்றும் செயல்பாட்டுக்காக, அமெரிக்க அரசின் டி.எப்.சி., எனும் பன்னாட்டு மேம்பாட்டு நிதி அமைப்பிடம் அதானி குழுமம் கடனுக்காக விண்ணப்பித்திருந்தது.
இந்திய பெருங்கடல் பகுதியில், சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க விரும்பிய அமெரிக்கா, கடன் வழங்க முன்வந்தது. அதன்படி, கடந்தாண்டு நவம்பர் மாதம், இத்திட்டத்துக்கு கிட்டத்தட்ட 4,600 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புக்கொண்டது.
இந்நிலையில், அமெரிக்க நிறுவனத்துடனான கடன் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியுள்ளதாக, 'அதானி போர்ட்ஸ்' நிறுவனம் பங்குச் சந்தைகளில் தாக்கல் செய்துள்ள ஆவணங்களில் தெரிவித்துள்ளது.
மேலும் திட்டத்துக்கான செலவு, நிறுவனத்தின் வருவாயிலிருந்தே மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும்; அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் முனையம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

