புகையிலை பொருட்கள் மீது பிப்., 1 முதல் கூடுதல் கலால் வரி
புகையிலை பொருட்கள் மீது பிப்., 1 முதல் கூடுதல் கலால் வரி
ADDED : ஜன 02, 2026 01:13 AM

புதுடில்லி: புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி மற்றும் பான் மசாலா மீதான சுகாதார செஸ், வரும் பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
தற்போதுள்ள ஜி.எஸ்.டி., இழப்பீட்டு செஸ் முடிவுக்கு வருவதை அடுத்து, இந்த புதிய வரி முறை நடைமுறைக்கு வருகிறது.
பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் மீது இனி 40 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கப்படும்.
இதுதவிர, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுகாதார செஸ் மற்றும் கூடுதல் கலால் வரியும் சேர்க்கப்படும். பீடிகளுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.,யும் அதற்கு மேல் கூடுதல் வரியும் விதிக்கப்படும். தற்போது வரை பான் மசாலா, புகையிலை பொருட்கள் மற்றும் சிகரெட்களுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி., மற்றும் இழப்பீடு செஸ் வசூலிக்கப்படுகிறது.
புதிய மாற்றங்களின்படி, குட்கா மீது 91 சதவீதமும்; மெல்லும் புகையிலை மற்றும் ஜர்தா மீது 82 சதவீதமும் கூடுதல் கலால் வரி விதிக்கப்படும்.
சிகரெட்டுகளுக்கு, அதன் வகையை பொறுத்து தலா 1,000 குச்சிகளுக்கு, 2,050 முதல் 8,500 ரூபாய் வரை வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கலால் வரி வாயிலாக கிடைக்கும் வருவாய் மாநிலங்களுடன் பகிரப்படும். சுகாதார செஸ் வாயிலாக கிடைக்கும் நிதி, சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி., இழப்பீடு வழங்குவதற்காக பெறப்பட்ட கடன்கள், வரும் ஜனவரி 31 உடன் அடைக்கப்படுவதால், இழப்பீட்டு செஸ் நீக்கப்பட்டு இந்த புதிய வரி விதிப்பு முறை அமலுக்கு வருகிறது.

