ADDED : அக் 09, 2025 12:51 AM

சென்னை:தமிழக இளைஞர்களுக்கு மோட்டார் வாகன திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க, ஜப்பான் நாட்டின் எஹிம் நிசான் பயிற்சி மையம் மற்றும் வழிகாட்டி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இதன்படி, அடுத்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில், மோட்டார் வாகன தொழில்நுட்ப பயிற்சி நிலையம், எஹிம் நிசானின் வழிகாட்டுதலின் கீழ் அமைக்கப்படும்.
மற்றொரு அம்சமாக, எஹிம் நிசான், இரு பணியாளர்களை நியமித்து, தமிழகத்தில், ஐ.டி.ஐ., இன்ஜினியரிங் முடித்த, 100 பேருக்கு தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும். ஜப்பானிய பயிற்சியாளர்கள் 'ஆன்லைன்' அமர்வுகள் வாயிலாகவும் பயிற்சி அளிப்பர்.
தமிழகத்தில் மூன்று முதல் ஐந்து மாதங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அதைதொடர்ந்து, ஜப்பான் நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு, மாட்சுயாமாவில் உள்ள எஹிம் நிசான் பயிற்சி நிலையத்தில் ஆறு மாத பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின், ஜப்பானில் உள்ள நிசான் நிறுவனத்தில் வேலை வழங்கப்படும்.
மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் அங்கு பணிபுரிந்த பின், தாயகம் திரும்புவோருக்கு, எஹிம் நிசானின் பரிந்துரை வாயிலாக, உள்நாட்டு வாகன துறையில் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.