வரி விதிப்பால் அமெரிக்காவுக்கு எந்த வகையிலும் பலன் இல்லை டிரம்ப் மீது கீதா கோபிநாத் விமர்சனம்
வரி விதிப்பால் அமெரிக்காவுக்கு எந்த வகையிலும் பலன் இல்லை டிரம்ப் மீது கீதா கோபிநாத் விமர்சனம்
ADDED : அக் 09, 2025 01:22 AM

புதுடில்லி:அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் விடுதலை நாள் வரி விதிப்பு, அந்நாட்டுக்கு எதிர்மறை தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளதாக பன்னாட்டு நிதியத்தின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் கீதா கோபிநாத் சாடியுள்ளார்.
வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டு ஆறு மாதங்களான பின்னும், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என உறுதியளிக்கப்பட்டதோ அவற்றில் பெருமளவு கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதள பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்க விடுதலை நாள் வரி விதிக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆகின்றன. இதுவரை வரி விதிப்பு என்ன சாதித்துள்ளது என ஆராய்ந்ததில், அந்நாட்டு அரசுக்கு வருவாய் ஈட்டியதா என பார்த்தால், கணிசமான அளவில் ஈட்டியுள்ளது.
ஆனால், இந்த சுமை முழுதுமாக அமெரிக்க நிறுவனங்களால் ஏற்கப்பட்டுள்ளது; குறிப்பிட்ட அளவு அமெரிக்க நுகர்வோருக்கு கடத்தப்பட்டு உள்ளது. எனவே, இது அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் மீது விதிக்கப்பட்ட ஒரு வரியைப் போல செயல்பட்டுள்ளது.
பணவீக்கத்தை அதிகரித்ததா என்றால், ஒட்டுமொத்தமாக சிறிதளவு அதிகரித்துள்ளது. வீட்டு உபயோகப் பொருட்கள், மரச் சாமான்கள், காபி போன்றவற்றின் பணவீக்கம் கணிசமாக அதிகரித்துள்ளது.
வர்த்தக சமநிலையை மேம்படுத்தியதற்கான அறிகுறி இல்லை. வரி விதிப்பு, அமெரிக்க உற்பத்தியை மேம்படுத்தியதா என்றால், அதற்கான அறிகுறியும் இதுவரை தென்படவில்லை. ஒட்டுமொத்தமாக வரி விதிப்பின் பலன் எதிர்மறையாகவே உள்ளது.
இவ்வாறு கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா உட்பட உலகின் அனைத்து நாடுகளின் மீதும் பரஸ்பர வரி விதித்தார்.
பல்வேறு நாடுகளும் பல தசாப்தங்களாக அமெரிக்க உற்பத்தியாளர்களை பாதிக்கும் வகையில் நியாயமற்ற வர்த்தக தடைகளை ஏற்படுத்தி உள்ளதாகவும், இதை சரி செய்வதே வரி விதிப்பின் நோக்கம் எனவும் தெரிவித்தார்.
விடுதலை நாள் வரிகள் என்ற பெயரில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வரி, நாடுகள் மற்றும் பொருட்கள் அடிப்படையில் பல முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவில் இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு, 50 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது.