'முறை சார்ந்த தங்க கடன் சந்தை 15 லட்சம் கோடி ரூபாயை எட்டும்'
'முறை சார்ந்த தங்க கடன் சந்தை 15 லட்சம் கோடி ரூபாயை எட்டும்'
UPDATED : அக் 09, 2025 01:27 AM
ADDED : அக் 09, 2025 01:24 AM

புதுடில்லி:நாட்டின் முறைப்படுத்தப்பட்ட தங்க கடன் சந்தை, அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் 15 லட்சம் கோடி ரூபாயை எட்டக் கூடும் என இக்ரா நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீப காலமாக தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருவதே இதற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]() |
முறை சார்ந்த கடன் சந்தை என்பது வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங்கும் தங்க நகை கடன்களை குறிக்கிறது.
இக்ராவின் முந்தைய மதிப்பீட்டின் படி, இந்தியாவின் முறைபடுத்தப்பட்ட தங்க கடன் சந்தை வரும் 2027 மார்ச் மாதத்துக்குள் 15 லட்சம் கோடியை ரூபாயை எட்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தங்கத்தின் விலை அதிகரிப்பால் கடன் மதிப்பு அதிகரித்துள்ள போதிலும், உத்தரவாதமாக வழங்கப்படும் தங்கத்தின் மதிப்பு கடந்த ஐந்து நிதியாண்டுகளில் 1.70 சதவீத, ஆண்டு கூட்டு வளர்ச்சியையே அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]() |
தங்க நகை கடன் பிரிவில் வங்கிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதாக இக்ரா தெரிவித்துள்ளது. என்.பி.எப்.சி.,களின் பங்கு கடந்த 2021 மார்ச்சில் 22 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த மார்ச்சில் 18 சதவீதமாக குறைந்துள்ளது.
எனினும், கடந்த ஜூன் மாத நிலவரப்படி, என்.பி.எப்.சி.,களின் தங்க கடன் சொத்து மதிப்பு 2.40 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்தாண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 41 சதவீதம் அதிகமாகும்.