ADDED : ஜூன் 18, 2025 12:58 AM

புதுடில்லி:கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த, விமான விபத்து காப்பீட்டை நிறுத்த இருப்பதாக, எஸ்.பி.ஐ., கார்டு அறிவித்து உள்ளது.
இதுகுறித்து நேற்று வெளியிட்ட அறிக்கை:
எஸ்.பி.ஐ., கிரெடிட் கார்டுகள், மற்றும் பிற வங்கிகளுடன் இணைந்து வினியோகித்த கார்டுகள் ஆகியவற்றுக்கு தனித்தனியாக, இரண்டு கட்டமாக காப்பீடு வசதி நிறுத்தப்பட உள்ளது.
முதற்கட்டமாக, வரும் ஜூலை 15 முதல் எஸ்.பி.ஐ., பிராண்டு கார்டுகளான, எஸ்.பி.ஐ., எலைட் மற்றும் பிரைம் கார்டுகளுக்கு காப்பீடு சலுகை நிறுத்தப்படுகிறது.
இதனை தொடர்ந்து, வரும் ஆக.,11ம் தேதி முதல், 'யூகோ பேங்க் எஸ்.பி.ஐ., கார்டு எலைட்', 'பஞ்சாப் அண்ட் சிந்த் பேங்க் எஸ்.பி.ஐ., கார்டு பிரைம்' உள்ளிட்ட கார்டுகளுக்கான விமான விபத்து காப்பீடு நிறுத்தப்பட உள்ளது.
இதுவரை விமான காப்பீடு சலுகையை பெற்ற கார்டுதாரர்கள், மாற்று வழிகளை நாடுமாறும், முன்னெச்சரிக்கையாக தனிநபர்கள் விமானப் பயணம் மேற்கொள்ளும் போது, உரிய பயணக் காப்பீடு திட்டத்தை எடுத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.