ADDED : மே 21, 2025 11:26 PM

சென்னை:மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டுக்காக, 'நாஸ்காம்' நிறுவனத்துடன், அண்ணா பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
அண்ணா பல்கலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில், 'எஸ்.எஸ்.சி., நாஸ்காம் பியூச்சர் ஸ்கில்ஸ்' நிறுவனத்துடன் அண்ணா பல்கலை, நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன் வாயிலாக, நாஸ்காம் நிறுவனம், ஐ.டி., உடன் இணைந்த அனைத்து துறை மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தொழில் துறை சார்ந்த படிப்புகளையும் சான்றிதழ்களையும் வழங்கும்.
இதில், செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு, க்ளவுட் கம்ப்யூட்டிங், டேட்டா சயின்ஸ் உள்ளிட்டவற்றில், நேரடி கற்றல் வாய்ப்புகளை வழங்க உள்ளது.
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தொழில் துறை அங்கீகாரத்துடனான சான்றிதழ்களையும் வழங்கும். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, புதிய பாடத்திட்ட உருவாக்கத்திற்காக, இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், அண்ணா பல்கலை பதிவாளர் பிரகாஷ், பல்கலை சி.யு.ஐ.சி., மைய இயக்குநர் சண்முகசுந்தரம், அண்ணா பல்கலை துணை இயக்குநர் குணசேகரன், நாஸ்காம் இயக்குநர் உதயசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

