ADDED : ஜூலை 10, 2025 11:01 PM

சென்னை:அப்பல்லோ மருத்துவ குழுமம், ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஆயுர்வேத மருத்துவத்துக்கு, ஆண்டுக்கு, 60,000 கோடி ரூபாய் சந்தை உள்ளது. ஆண்டுதோறும், 16 சதவீதம் சந்தை வளர்ச்சியை அது எட்டி வருகிறது. இதற்கிடையே, அலோபதி மருத்துவத்தில், முன்னணியில் இருந்து வரும் அப்பல்லோ மருத்துவ குழுமம், ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பிலும் ஈடுபட உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள், முடி வளர்ச்சிக்கான எண்ணெய், முகப்பொலிவு கிரீம்கள் உள்ளிட்ட 50 விதமான ஆயுர்வேத மருந்துகளை தயாரிக்க உள்ளது. இதற்காக ஐந்தாண்டுக்கு, 500 கோடி ரூபாயை, அப்பல்லோ குழுமம் முதலீடு செய்கிறது.
இது குறித்து அப்பல்லோ மருத்துவ குழும துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி கூறியதாவது:
அப்பல்லோ ஆயுர்வேத மருந்துகள், பாரம்பரிய மருத்துவ பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை உள்ளடக்கியதாக இருக்கும்.
மேலும், சோதனை செய்யப்பட்ட மருந்துகள் உற்பத்தியில் கவனம் செலுத்துகிறோம். காலம், காலமாக போற்றப்படும் பாரம்பரிய மருந்துகளுடன் புதுமையை ஒருங்கிணைப்பதன் வாயிலாக, வெளிநாடுகளில் ஆயுர்வேத மருந்துகளை சந்தைப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.