ADDED : ஜூலை 01, 2025 06:47 AM

சென்னை : தமிழகத்தில் உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்க, உதவி மையத்தை டி.என்.எபெக்ஸ் நிறுவனம் அமைத்துள்ளது.
தமிழகத்தில் உணவுப் பொருட்கள் தயாரிப்பை உள்ளடக்கிய, உணவு பதப்படுத்தும் தொழிலில், பல்வேறு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
இந்நிறுவனங்களுக்கு, உணவுப் பொருட்களை பதப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து வித புதிய தொழில்நுட்பங்கள் குறித்த ஆலோசனைகள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில், 'டி.என்.புட் டெக்னாலஜி ரெபோசிட்டரி டெஸ்க்' எனப்படும், உணவு தொழில்நுட்ப களஞ்சியக உதவி மையத்தை, தமிழக அரசின் டி.என்.எபெக்ஸ் நிறுவனம் அமைத்துள்ளது.
இதுகுறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உணவுத் தொழிலுக்கு தேவையான அனைத்து வித தொழில்நுட்பங்களும், நம் நாட்டில் உள்ள ஆராய்ச்சி மையங்கள் மற்றும் நிறுவனங்கள் வசம் உள்ளன. அவை குறித்த விபரம், தமிழக உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு தெரிவதில்லை.
எனவே, உணவு தொழில்நுட்பங்கள் தொடர்பான ஆலோசனைகளுக்கு டி.என்.எபெக்ஸ் அதிகாரிகளை, 95002 61727, 95002 61827 மொபைல் போன் எண்களில் தொடர்பு கொண்டால், அவர்கள் உதவி செய்வர். இவ்வாறு அவர் கூறினார்.