சுகாதாரம், கடல் வணிக துறை 'ஸ்டார்ட் அப்'களுக்கு உதவி
சுகாதாரம், கடல் வணிக துறை 'ஸ்டார்ட் அப்'களுக்கு உதவி
ADDED : ஜன 25, 2024 12:38 AM

சென்னை:தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என். நிறுவனம், சுகாதாரம் மற்றும் கடல் வணிக துறைகளில் ஈடுபட்டு வரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவ, 'புளூ எக்கானமி, ஹெல்த்கேர்' மன்றங்களை துவக்கிஉள்ளது.
அவற்றை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை செயலர் அர்ச்சனா பட்நாயக், ஸ்டார்ட் அப் டி.என். தலைமை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர்.
மீன் பிடி, வண்ண மீன் வளர்ப்பு போன்றவற்றை உள்ளடக்கிய கடல் வணிகம் மற்றும் சுகாதார துறையில் செயல்பட்டு வரும் ஸ்டார்ட் அப் எனப்படும் புத்தொழில் நிறுவனங்களின் தொழில்முனைவோரை, புதிய மன்றங்கள் வாயிலாக மாதந்தோறும் அழைத்து கூட்டங்கள் நடத்தப்படும்.
அந்த கூட்டங்களில், ஏற்கனவே சாதித்த தொழில் துறை நிபுணர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் பங்கேற்று, சந்தை வாய்ப்பு, முதலீடு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆலோசனைகள் வழங்குவர்.
தொழில் நிறுவனங்களின் சேவைகளையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இதற்காக, ஸ்டார்ட் அப் டி.என். நிறுவனம், 'டிரிவிட்ரான்' குழும நிறுவனங்கள், 'சத்யபாமா இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி, இந்தியன் ஏஞ்சல் நெட்ஒர்க்' ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
நிகழ்ச்சியில், அர்ச்சனா பட்நாயக் பேசும் போது, 'மத்திய அரசின் தர வரிசை பட்டியலில், ஸ்டார்ட் அப் டி.என். முதலிடத்தை பிடித்துஉள்ளது.
'மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொழில் துவக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது' என்றார்.