ADDED : ஜூலை 13, 2025 07:12 PM

முதலீடு வாய்ப்பாக வர்த்தக பத்திரங்கள் ஈர்ப்புடையதாக அமைந்தாலும், சில்லரை முதலீட்டாளர்கள் கவனமாக அணுக வேண்டும்.
வர்த்தக பத்திரங்கள் என குறிப்பிடப்படும் நிறுவனங்களால் வெளியிடப்படும் பத்திரங்கள் முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இந்த பிரிவில் ரேட்டிங் முக்கியம் என்றாலும், குறைந்த ரேட்டிங் கொண்ட பத்திரங்கள் வெளியீடும் அதிகரிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணைய மேடைகள் மூலம் பத்திரங்கள் வாங்குவது எளிதாகி இருப்பதால், சில்லரை முதலீட்டாளர்கள் பலரும் இதில் ஆர்வம் காட்டுகின்றனர். பத்திர முதலீட்டில் பல்வேறு சாதகங்கள் இருந்தாலும், இதில் கவனமாகவும் செயல்படுவது அவசியம்.
அதிக பலன்
அதிக பலன் அளிக்கக்கூடியவை என்பது, வர்த்தக பத்திரங்கள் தொடர்பான மிகப்பெரிய ஈர்க்கும் அம்சமாக அமைகிறது. வங்கி வைப்பு நிதி மற்றும் சிறு சேமிப்பு திட்டங்களோடு ஒப்பிடும் போது, வர்த்தக பத்திரங்கள் அதிக பலன் தருவதாக கருதப்படுகிறது. முதலீடு தரம் கொண்ட பத்திரங்கள் 7 முதல் 14 சதவீதம் வரை பலன் தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பணமாக்கல் தன்மையும் சாதகமான அம்சமாக அமைகிறது. சிறு சேமிப்பு திட்டங்கள், வைப்பு நிதிக்கு லாக் இன் காலம் உண்டு. பத்திரங்கள் இரண்டாம் சந்தையில் பரிவர்த்தனை செய்யப்படுவதால் தேவையெனில் விற்றுக் கொள்ளலாம்.
முதலீட்டாளர்கள் பல வகையான பத்திரங்களை எளிதாக அணுகலாம். 10,000 ரூபாய் அளவில் முதலீட்டை துவங்கலாம். எனினும், இந்த முதலீடு தொடர்பான இடர் அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சிறு சேமிப்பு திட்டங்கள் அரசின் பாதுகாப்பு கொண்டவை. வங்கி வைப்பு நிதிகளும் பொதுவாக பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
வர்த்தக பத்திரங்களை பொறுத்தவரை அதை வெளியிட்ட நிறுவனங்கள், அசல் மற்றும் வட்டியை உரிய காலத்தில் திருப்பித் தராமல் போகும் அபாயம் உள்ளது. இது, கிரெடிட் ரிஸ்க் என குறிப்பிடப்படுகிறது. எனவே தான், இவற்றுக்கான ரேட்டிங் முக்கியமாகிறது.
முதலீடு தேர்வு
பொதுவாக, 'ஏஏ' ரேட்டிங் கொண்ட பத்திரங்கள் அதிக பாதுகாப்பு கொண்டவையாக கருதப்படுகின்றன. முதலீட்டாளர்கள் பத்திரங்கள் அளிக்கும் பலனோடு அவற்றின் கால அளவையும் கவனிக்க வேண்டும். புதிய முதலீட்டாளர்கள் எனில் ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டு கால பத்திரங்களை நாடலாம்.
மேலும் வட்டி விகித இடர் மற்றும் பணமாக்கல் இடர் ஆகியவையும் உண்டு. பத்திரங்களை முதிர்வு வரை வைத்திருந்தால், வட்டி விகித இடரை எளிதாக எதிர்கொள்ளலாம். அதிக வர்த்தக வாய்ப்பு கொண்டிருக்காவிட்டால் பணமாக்கல் தன்மையும் சிக்கலாகலாம்.
முதலீட்டாளர்கள் இடர் அம்சங்களை பரிசீலித்து, தங்கள் நிதி இலக்குகளுக்கு ஏற்ப முடிவு செய்ய வேண்டும். அதிக பலனும், குறைந்த இடரும் கொண்டதாக முன்னிறுத்தப்படும் வெளியீடுகளை தவிர்ப்பது நல்லது. வர்த்தக பத்திரங்கள் முதலீடு, இந்த வகை முதலீட்டின் தன்மையை நன்கறிந்தவர்களுக்கே ஏற்றது என கருதப்படுகிறது.
சில்லரை முதலீட்டாளர்கள் நேரடியாக முதலீடு செய்வதைவிட, கடன்சார் நிதிகள் மூலம் முதலீடு செய்யலாம் என வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும், முதலீடு தொகுப்பில் நிரந்தர வருமான பிரிவில் இவற்றின் அளவு 10 முதல் 20 சதவீதம் வரை இருப்பது பொருத்தமாக இருக்கும். எஞ்சியவற்றை அரசு பத்திரங்கள், வைப்பு நிதிகள் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டும்.