உரிமை கோராத நிதி சொத்துகள் அக்., 4 முதல் விழிப்புணர்வு பிரசாரம் உங்கள் பணம், உங்கள் உரிமை: மத்திய அரசு
உரிமை கோராத நிதி சொத்துகள் அக்., 4 முதல் விழிப்புணர்வு பிரசாரம் உங்கள் பணம், உங்கள் உரிமை: மத்திய அரசு
ADDED : அக் 02, 2025 12:16 AM

புதுடில்லி : உரிமை கோரப்படாத நிதி சொத்துகள் குறித்து மூன்று மாதங்களுக்கு விழிப்புணர்வு பிரசாரத்தை மத்திய நிதி அமைச்சகம், வரும் 4ம் தேதி துவங்கவுள்ளது.
'உங்கள் பணம், உங்கள் உரிமை' என்ற பெயரில், இந்த பிரசாரத்தை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், குஜராத் மாநிலம் காந்திநகரில் வரும் சனிக்கிழமை துவங்கி வைக்க உள்ளார்.
நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதி சேவை துறையின் ஒருங்கிணைப்பில், ரிசர்வ் வங்கி, காப்பீடு கண்காணிப்பு அமைப்பான ஐ.ஆர்.டி.ஏ., பங்குச்சந்தை கண்காணிப்பு அமைப்பான செபி, கம்பெனி விவகார துறையின்கீழ் செயல்படும் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் ஆகியவை இணைந்து இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடவுள்ளன.
காப்பீடு கிளெய்ம்கள், வங்கி டிபாசிட்டுகள், டிவிடெண்ட், பங்குகள், மியூச்சுவல் பண்டு முதிர்ச்சி நிதி உள்ளிட்ட பல நிதி சொத்து கணக்குகளில் உரிமை கோரப்படாதவை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதலீட்டாளரின் மறைவு, குடும்பத்தினர் மற்றும் வாரிசுதாரருக்கு தகவல் தெரியாமல் இருப்பது, முதலீட்டாளர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது உள்ளிட்ட சில காரணங்களால் இதுபோன்ற நிலை உள்ளது.
மத்திய அரசு சார்பில் நடைபெறவுள்ள விழிப்புணர்வு பிரசாரத்தில், உரிமை கோரப்படாத நிதி சொத்துகள் தொடர்பாக தகவல் கேட்க வருபவர்களுக்கு உடனுக்குடன் அந்த இடத்திலேயே வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். தங்கள் நிதி சொத்து கணக்குகளை எவ்வாறு தேடுவது, ஆவணங்களை எப்படி அப்டேட் செய்வது, கிளெய்ம்களை எவ்வாறு பெறுவது என்ற நடைமுறைகள் தெரிவிக்கப்படும். டிஜிட்டல் வசதிகள் வாயிலாக, படிப்படியாக செயல்முறை விளக்கமும் அளிக்கப்படும்.
மக்களால் சேமிக்கப்பட்ட ஒவ்வொரு ரூபாயையும் அவர்கள் உரிமைப்படி பெறுவதை உறுதி செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டுவதாக நிதி சேவை துறை உயரதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.விழிப்புணர்வு பிரசாரத்தில், நிதி திட்டங்களின் தகவல்கள் குறித்த கண்காட்சியை வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், ஓய்வூதிய அமைப்புகள் இடம்பெற செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
******************************
பிரைட் டைகரில் டாடா மோட்டார்ஸ் ரூ.120 கோடி முதலீடு
மும்பை : டிஜிட்டல் தளவாட தீர்வுகளை வழங்கும், 'பிரைட் டைகர்' என்ற நிறுவனம், நிதி திரட்டல் மூன்றாம் சுற்றில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 120 கோடி ரூபாய் முதலீடு பெற்றுள்ளது.
இந்நிறுவனத்தில், 42 முதல் 46 சதவீதம் வரை பங்கு வைத்துள்ள டாடா நிறுவனம், மொத்தம் 270 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளது. டாடா நிறுவனத்தின் டிஜிட்டல் தளவாட திறன்களை மேம்படுத்த இந்த முதலீடு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், டாடா நிறுவனத்தின் டிஜிட்டல் தளவாட கட்டமைப்புகளை மேம்படுத்த, செயற்கை நுண்ணறிவும் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. நடப்பு நிதியாண்டின் நான்காம் காலாண்டிற்குள் இது செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.