ADDED : ஜூன் 28, 2025 11:43 PM

புதுடில்லி:வங்கதேசத்தில் இருந்து தரைவழி மார்க்கமாக, சணல் மற்றும் சணல் பொருட்கள் இறக்குமதிக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக அன்னிய வர்த்தகத்துக்கான பொது இயக்குநரகமான டி.ஜி.எப்.டி., அறிக்கை வெளியிட்டுள்ளது. சணல், சணல் பொருட்கள், சணல் கழிவு, ஒற்றை சணல் இழை, நெய்யப்பட்ட சணல் இழை, ப்ளீச் செய்யப்படாத நெய்யப்பட்ட சணல் இழை ஆகியவற்றின் இறக்குமதிக்கு இந்த தடை பொருந்தும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்திய துறைமுகம் வழியாக, நேபாளம் மற்றும் பூடான் நாடுகளுக்கு வங்கதேசத்தில் இருந்து இந்த சணல் பொருட்கள் போக்குவரத்துக்கு இந்த தடை பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்தியாவில் இறக்குமதி செய்து, மறுஏற்றுமதி செய்ய தடை பொருந்தும் என்று டி.ஜி.எப்.டி., தெரிவித்துள்ளது.
வங்கதேசத்துடன் இந்தியாவின் உறவில் உரசல் நீடித்து வரும் நிலையில், அந்நாட்டின் பொருட்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, சணல், சணல் பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.