கழிவுகளை காசாக்கும் அம்மாருண் குழுமம்! பவுண்டரி கழிவில் செங்கற்கள்; மணல் மறுசுழற்சி
கழிவுகளை காசாக்கும் அம்மாருண் குழுமம்! பவுண்டரி கழிவில் செங்கற்கள்; மணல் மறுசுழற்சி
UPDATED : அக் 19, 2026 12:00 AM
ADDED : அக் 18, 2026 04:37 AM
கோ வையைச் சேர்ந்த அம்மாருண் குழுமம், பவுண்டரி கழிவுகளில் செங்கற்கள் தயாரித்தல், கழிவு மணலை மறுசுழற்சி செய்தல், இலை மற்றும் காய்கறிக் கழிவுகளில் இயற்கை உரம் தயாரித்தல் என சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
பவுண்டரி கழிவில் செங்கற்கள்!
இரும்பு வார்ப்புகள் தயாரிக்கும் பவுண்டரிகளில் இருந்து வெளியேறும் கருப்பு மணலைச் செம்மண்ணுடன் கலந்து, அம்மாருண் பவுண்ட்ரீஸ் நிறுவனம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக செங்கற்கள் தயாரித்து வந்தது. இதுவரை 15 கோடி செங்கற்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் செம்மண் தோண்டத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாற்று முயற்சியாக அன்னுார் அருகே உள்ள என்விரோகார்ட் நிறுவனத்தில் பிளை ஆஷ் கற்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டன.
பவுண்டரி கழிவுகளில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவற்றைப் பயன்படுத்தி, கடந்த இரண்டு ஆண்டுகளாக பிளை ஆஷ் கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இதுவரை 75 லட்சம் கற்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. தற்போது நாளொன்றுக்கு 40 ஆயிரம் கற்கள் தயாரிக்கப்படுகின்றன.
கழிவு மணல் மறுசுழற்சி!
பவுண்டரிகளில் பயன்படுத்திய கழிவு மணலைத் தண்ணீர் மூலம் சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தும் முறையை அம்மாருண் என்விரோகார்ட் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. உலகிலேயே முதல் முறையாக இத்தகைய முறையைச் செயல்படுத்துவதாக நிறுவனம் தெரிவிக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில், 100-க்கும் மேற்பட்ட ஸ்டீல் பவுண்டரிகளில் இருந்து 5.50 லட்சம் டன் கழிவு மணல் சேகரிக்கப்பட்டுச் சுத்திகரிக்கப்பட்டு, 120-க்கும் மேற்பட்ட பவுண்டரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட மணலை 50 முறை வரை பயன்படுத்த முடிவதால், 2 கோடி டன்னுக்கும் அதிகமான புதிய மணல் வாங்குவது தவிர்க்கப்பட்டுள்ளது. உபரி மணல் பிளை ஆஷ் கற்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
கழிவு இலைகளில் இயற்கை உரம்!
ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதன் அவசியத்தை இயற்கை விஞ்ஞானி டாக்டர் நம்மாழ்வார் வலியுறுத்தி வந்தார். நாட்டில் ரசாயன உரங்களின் தேவையைப் பூர்த்தி செய்ய இறக்குமதியும் மேற்கொள்ளப்படும் நிலையில், இயற்கை உரம் தயாரிக்க உதவும் இலைகள் உள்ளிட்ட கழிவுகள் வீணடிக்கப்படுகின்றன.
இதைக் கருத்தில் கொண்டு, அம்மாருண் குழுமம் சார்பில் 15 மாதங்களுக்கு முன் ஒருங்கிணைந்த பண்ணை தொடங்கப்பட்டது. பல்வேறு இடங்களில் இருந்து காய்கறி இலைகள், பச்சை இலைகள் உள்ளிட்ட கழிவுகள் சொந்த வாகனங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, இயற்கை உரமாக மாற்றி விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
பண்ணையில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு, காய்கறிகளை நறுக்கிய பின் கிடைக்கும் கழிவுகள் உணவாக வழங்கப்படுகின்றன. கால்நடைச் சாணத்துடன் காய்ந்த இலைகள், பச்சை இலைகள் கலந்து அறிவியல் முறையில் இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. சாணம் கலந்த தண்ணீரைப் பயன்படுத்தி மசாலா புல், மக்காச்சோளம் உள்ளிட்ட தீவனப் பயிர்களும் வளர்க்கப்படுகின்றன.
143 நிறுவனங்களுக்குச் சேவை!
ஹோட்டல்கள் 54, திருமண மண்டபங்கள் 8, கல்லுாரிகள் 22, பள்ளிகள் 8, தொழிற்சாலைகள் 15, அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் காலனிகள் 21, மருத்துவமனைகள் 6, அரசு அலுவலகங்கள் 5, இலைக் கடைகள் 2, வாரச்சந்தைகள் 2 என மொத்தம் 143 நிறுவனங்களில் இருந்து இலை, உணவுக் கழிவுகள் இலவசமாகச் சேகரிக்கப்படுகின்றன.
தற்போது நாளொன்றுக்கு 10 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டு உரமாக மாற்றப்படுகின்றன. கடந்த 15 மாதங்களில் 3,770 டன் காய்ந்த இலைகள், காய்கறிக் கழிவுகள், பச்சை இலைகள், மீதமான உணவுகள் சேகரிக்கப்பட்டு, 1,885 டன் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த உரம் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதைப் பயன்படுத்திய விவசாயிகளின் பயிர்கள் நன்றாக வளர்வதாக நிறுவனம் தெரிவிக்கிறது. கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணியை மேலும் விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.
