ADDED : ஏப் 18, 2025 11:04 PM

கோவை:'கொடிசியா' சார்பில், 'பில்டு இன்டெக் -2025' கண்காட்சி, கோவையில் நேற்று துவங்கியது. கண்காட்சியில் 45 நாட்களில் தயாராகும் ரெடிமேட் வீடு, டைனி வீடு உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
வரும், 21ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கண்காட்சியை, கலெக்டர் துவக்கி வைத்தார். கொடிசியா தலைவர் கார்த்திகேயன், கண்காட்சி தலைவர் ஞானவள்ளல் ஆகியோர் உடனிருந்தனர்.
கண்காட்சியில், தமிழகம் மட்டுமல்லாத வெளிமாநிலங்களில் இருந்தும், 250க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அரங்குகளை அமைத்துள்ளன.
இலகுவான கட்டுமானப் பொருட்கள், மாடிப்படி, உள், வெளி அலங்காரங்கள், யூ.பி.வி.சி., கழிப்பறை, குளியலறை பொருட்கள், சுழன்று மடங்கும் கதவுகள், தரைவிரிப்பு, சோலார் உபகரணங்கள், அறைகலன்கள் என அஸ்திவாரம் முதல், மேற்கூரை வரை கட்டுமானம் சார்ந்த அனைத்துப் பொருட்கள், தொழில்நுட்பங்கள், நவீன வரவுகள் இடம்பெற்றுள்ளன. வர்த்தக மற்றும் பண்ணை வீட்டுப் பயன்பாட்டுக்கான, அதிகபட்சம் 20 X 8 அளவுள்ள டைனி ஹவுஸ்; கான்கிரீட் ரெடிமேட் வீடுகள் ஆகியவை கண்காட்சியில் பிரதான ஈர்ப்பை பெற்றுள்ளன.

