வாங்குவோர், விற்போர் சந்திப்பு நிகழ்ச்சி கோவையில் நவ . , 7ல் துவங்குகிறது
வாங்குவோர், விற்போர் சந்திப்பு நிகழ்ச்சி கோவையில் நவ . , 7ல் துவங்குகிறது
ADDED : அக் 26, 2024 11:18 PM

சென்னை:சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளை, 28 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று தருவதற்காக, தமிழக அரசு கோவையில், நவ., 7, 8ல் 'வாங்குவோர், விற்போர் சந்திப்பு' நிகழ்ச்சியை நடத்துகிறது. இதில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள், 'பேம் டி.என்' தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
உள்ளூரை சேர்ந்த பல நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு வெளிநாடுகளில் தேவை இருந்தாலும், சில நிறுவனங்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.
எனவே, வெளிநாட்டு நிறுவனங்களை தமிழகம் அழைத்து வந்து, சிறு தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்குவதற்காக, தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ் செயல்படும், 'பேம் டி.என்' நிறுவனம், வாங்குவோர், விற்போர் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த உள்ளது.
அதன்படி, கோவை கொடிசியா அரங்கில் நவ., 7, 8ல் வாங்குவோர், விற்பனையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதில், தொழிற்சாலை வால்வு, இயந்திரங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள், தொழிற்சாலை மற்றும் வேளாண் துறைக்கு தேவைப்படும் பம்பு, எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்கள், மின் வாகன மோட்டார், மின் உற்பத்தி சாதனங்கள், 'டூல்ஸ் அண்டு டைஸ்' ஆகியவற்றில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் பங்கேற்கலாம்.
நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள், பேம் டி.என்., தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.