வாகன மாசுபாட்டை கட்டுப்படுத்த 'கபே 3' வரைவு விதிகள் வெளியீடு
வாகன மாசுபாட்டை கட்டுப்படுத்த 'கபே 3' வரைவு விதிகள் வெளியீடு
ADDED : ஜூலை 17, 2026 06:56 AM

புதுடில்லி: கார்களின் எரிபொருள் சிக்கன திறனை அதிகரித்து, கார்பன் உமிழ்வை மேலும் குறைக்கும் நோக்கில், 'கபே 3' வரைவு விதிகளை மத்திய அரசு வெளியிட்டு, வாகன துறை மற்றும் இந்த விவகாரத்துடன் தொடர்புடையவர்களின் கருத்துகளை கேட்டுள்ளது.
இது குறித்து மத்திய எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
'கபே 3' வரைவு விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வரைவு தொடர்பாக வாகன உற்பத்தியாளர்கள், தொழில் அமைப்புகள் மற்றும் இதில் சம்பந்தப்பட்ட பிறர் தங்களது கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை தெரிவிக்கலாம்.
புதிய விதிகளின் வாயிலாக, பயணியர் வாகனங்களின் சராசரி எரிபொருள் சிக்கன திறனை மேம்படுத்துவதுடன், கார்பன் உமிழ்வை மேலும் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வரும் ஆகஸ்டு 6ம் தேதிக்குள், எரிசக்தி அமைச்சக இணையதளம், மின்னஞ்சலில் கருத்து தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பெறப்படும் கருத்துகள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, இறுதி விதிகள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கபே 3 விதிகள் குறித்து ஆக.6ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க அவகாசம்
