ADDED : ஜூலை 17, 2026 06:55 AM

ஜெர்மனியில் களமிறங்கும் ஹீரோ மோட்டோகார்ப்
இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், கே.எஸ்.ஆர்., குழுமத்துடன் வினியோக கூட்டணி அமைத்து, ஜெர்மனி சந்தையில் தடம் பதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இக்கூட்டணி வாயிலாக, எக்ஸ்பல்ஸ் 200 4வி உள்ளிட்ட தனது அதிநவீன இருசக்கர வாகனங்களை ஐரோப்பிய சந்தைகளில் களமிறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அவுரம் பிராப்டெக் வசம் ஹவுசிங்.காம் நிறுவனம்
ரியல் எஸ்டேட் தொழில்நுட்ப நிறுவனமான அவுரம் பிராப்டெக், சொத்து விளம்பர தளமான ஹவுசிங்.காம் நிறுவனத்தை 458 கோடி ரூபாய் முதலீட்டில் முழுமையாக கையகப்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக, ரியல் எஸ்டேட் துறையில் தேவை, இருப்பு, தரகு, வாடகை உள்ளிட்ட பரிவர்த்தனைகளை ஒரே கட்டமைப்புக்குள் கொண்டு வர உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பி.எஸ்.என்.எல்., இடமிருந்து ஒப்பந்தம் பெற்றது ஐ.டி.ஐ.,
பொதுத்துறை நிறுவனமான ஐ.டி.ஐ., அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., இடமிருந்து 856.39 கோடி ரூபாய் மதிப்பிலான 4ஜி மொபைல் நெட்வொர்க் விரிவாக்க பணி ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. இந்த புதிய திட்டத்தின் கீழ், மேற்கு இந்திய பகுதிகளில் பி.எஸ்.என்.எல்., 4ஜி நெட்வொர்க் வினியோக கட்டமைப்பை ஐ.டி.ஐ., விரிவாக்கம் செய்ய உள்ளது.
புதிய ஜெமினி எக்ஸ்பீரியன்ஸ் மையம் தொடங்கிய டி.சி.எஸ்.,
தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ்., கூகுள் கிளவுட் உடன் இணைந்து கொல்கட்டாவில் புதிய 'ஜெமினி எக்ஸ்பீரியன்ஸ் மையத்தை' நேற்று தொடங்கியது. நுகர்வோர் வணிகங்களுக்கான ஏ.ஐ., தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்துவதற்காகவும், நிறுவனத்தின் டிஜிட்டல் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காகவும் இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஷியாம் மெட்டாலிக்ஸ் புதிய உற்பத்தி பிரிவு
ஷியாம் மெட்டாலிக்ஸ் அண்ட் எனர்ஜி நிறுவனம், ஒடிஷாவிலுள்ள தனது சம்பல்பூர் ஆலையில் 18,000 டன் வருடாந்திர உற்பத்தித் திறன் கொண்ட அலுமினியம் பாயில் உற்பத்தி பிரிவை தொடங்கியுள்ளது. இதற்காக நிறுவனம் 800 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இது, இந்நிறுவனத்தின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் வினியோக கட்டமைப்பை வலுப்படுத்தும்.
