UPDATED : ஜன 13, 2024 11:47 AM
ADDED : ஜன 09, 2024 01:08 AM
புதுடில்லி : இந்தியாவில் வாகன விற்பனை, கடந்த ஆண்டு 11 சதவீதம் உயர்ந்துள்ளதாக, வாகன முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த வாகன விற்பனை, கடந்த 2022ம் ஆண்டில், 2.14 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு, 11 சதவீதம் உயர்ந்து, 2.38 கோடியாக அதிகரித்துள்ளது.பயணியர் வாகனங்கள் 11 சதவீதமும், இரு சக்கர வாகனங்கள் 9 சதவீதமும், மூன்று சக்கர வாகனங்கள் 58 சதவீதமும் உயர்ந்துள்ளன. அதேபோல், வணிக வாகனங்கள், டிராக்டர் ஆகியவை கிட்டத்தட்ட 8 சதவீதம் வரை உயர்வை கண்டு இருந்தன.
இதுகுறித்து, வாகன முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாவது:வாகனத்துறையின் கீழ் உள்ள ஒவ்வொரு பிரிவுகளும், இந்த ஆண்டும் வளர்ச்சியை நோக்கி நகரக்கூடும். புதிய அறிமுகம் மற்றும் நிலையான சந்தையால், பயணியர் வாகனங்களின் விற்பனை வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பாண்டின் முதல் பாதியில் நடைபெற உள்ள புதிய அறிமுகங்கள் வாயிலாக, இரு சக்கர வாகன விற்பனை அதிகரிக்கும். அத்துடன் தற்போது இருக்கும் அதிகப்படியான மின்வாகன சூழலும், இதற்கு உதவும்.
தேர்தல்கள் மற்றும் உள் கட்டமைப்பு திட்டங்களில், அரசின் செலவினங்கள் அதிகரித்துள்ளதாலும், நிலக்கரி, சிமென்ட் சார்ந்த முக்கிய தொழில்துறைகளின் தேவை அதிகரித்துள்ளதாலும், வணிக வாகன பிரிவு வளர்ச்சிஅடையக்கூடும்.குறைந்த எரிபொருள் விலை மற்றும் விவசாயிகளுக்கான பயிர் பணம் வழங்கல் போன்ற காரணங்கள், வாடிக்கையாளர்களின் வாகனம் வாங்கும் உணர்வை அதிகரித்துள்ளன. இதனால், வாகன தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இத்துடன், பழைய வாகனங்களின் மாற்றுதல் வாயிலாக கூட, வாகன சந்தை மேம்பட வாய்ப்பு உள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.