நவ., கார் விற்பனை 6.59% உயர்வு; 2ம் இடத்தை நெருங்குகிறது மஹிந்திரா
நவ., கார் விற்பனை 6.59% உயர்வு; 2ம் இடத்தை நெருங்குகிறது மஹிந்திரா
ADDED : டிச 03, 2024 08:32 PM
சென்னை; நவம்பர் மாத கார் விற்பனை, கடந்த ஆண்டின் நவம்பருடன் ஒப்பிடுகையில், 6.59 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில், 3 லட்சம் கார் கள் விற்பனையான நிலை யில் இந்த நவம்பரில், 3.20 லட்சம் கார்கள் விற் பனை செய்யப்பட்டுள்ளன.
கார் விற்பனை எண்ணிக்கையில், மாருதி சுசூகி தொடர்ந்து முதலிடத்தில் உள்ள நிலையில்,, இரண்டாம் இடத்துக்கான போட்டியில் டாடா மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. தற்போது மூன்றாவதாக மஹிந்திரா நிறுவனம் வந்துள்ளது, இரண்டாம் இடத்திற்கான போட்டி சூடுபிடிக்க செய்துள்ளது.
பி.இ., - 6இ மற்றும் எக்ஸ்.இ.வி., - 9இ ஆகிய கார்களை கடந்த வாரம் அறிமுகப்படுத்தி மின் வாகன சந்தையை உலுக்கியுள்ள மஹிந்திரா நிறுவனம், அந்த பிரிவிலும் குறிப்பிடத்தக்க இடத்தை பிடிக்கும் என நம்பப்படுகிறது. அதிகபட்சமாக, டொயோட்டா நிறுவன விற்பனை வளர்ச்சி, 47.73 சதவீதம்.
அதன் இன்னோவா ஹைகிராஸ் மற்றும் ஹைரைடர் கார்களின் விற்பனை, நவம்பரில் 1 லட்சத்தை கடந்துள்ளது. எம்.ஜி., வின்சர் மின்சார காருக்கும், வாடகை முறை பேட்டரி திட்டத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, எம்.ஜி., நிறுவன விற்பனை வளர்ச்சி, முதல் முறையாக 45 சதவீதத்தை எட்டியுள்ளது.
ஹோண்டா நிறுவன கார்களின் விலை அதிகமாகவும், வசதிகள் குறைவாகவும் காணப்படுவதால், 43 சதவீத விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நாளை அறிமுகமாக உள்ள மூன்றாம் தலைமுறை அமேஸ் கார், இந்நிறுவன விற்பனை சரிவைத் தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.