சரக்குகளை கையாளும் நேரம் 'கதி சக்தி'யால் பாதியாக குறைவு
சரக்குகளை கையாளும் நேரம் 'கதி சக்தி'யால் பாதியாக குறைவு
ADDED : நவ 28, 2024 02:12 AM

சென்னை:''மத்திய அரசின் 'கதி சக்தி' திட்டத்தால், துறைமுகங்களில் சரக்குகளை கையாளும் நேரம், 43.40 மணி நேரத்தில் இருந்து, 22.57 மணி நேரமாக குறைந்துள்ளது,'' என, மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை இணை செயலர் விமல் ஆனந்த் தெரிவித்தார்.
இ.இ.பி.சி., எனப்படும் இன்ஜினியரிங் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் சார்பில், சென்னை வர்த்தக மையத்தில், சர்வதேச இன்ஜினியரிங் பொருட்கள் கண்காட்சி மற்றும் மாநாடு நாளை வரை நடக்கிறது. இதில், 40 நாடுகளைச் சேர்ந்த, 300 பார்வையாளர்கள் பங்கேற்றனர். கண்காட்சியில், 290 நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
மத்திய செயலர் விமல் ஆனந்த் பேசியதாவது:உலகின் அனைத்து நாடுகளுக்கும் இந்திய இன்ஜினியரிங் பொருட்களை எடுத்துச் செல்வதில் இ.இ.பி.சி., முக்கிய பங்கு வகிக்கிறது. 2021 - 2022ல், இந்திய இன்ஜினியரிங் பொருட்கள் ஏற்றுமதி, 8.40 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது. இது, இந்தாண்டில், 9.15 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும். மத்திய அரசு, தொழில் துறையை ஊக்குவித்து, சரக்குகளை விரைவாக எடுத்துச் செல்ல, 'கதி சக்தி' திட்டம், உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு மானிய திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களை துவக்கியது.
இதனால், கடந்த 2014ம் ஆண்டில், துறைமுகங்களில் சரக்குகளை கையாளுவதற்கு ஆன 43.40 மணி நேரம், கடந்த ஆண்டில், 22.57 மணி நேரமாக குறைந்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
தமிழகம் முன்னிலை
தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை செயலர் அதுல் ஆனந்த் கூறுகையில், இந்தியாவில் இருந்து இன்ஜினியரிங் பொருட்கள் ஏற்றுமதி செய்வதில், தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களும் தமிழகத்தில் தான் அதிகம் உள்ளனர். பெரிய தொழில் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையில் முதலீடு செய்வதற்கு உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்றார்.