சீன ரப்பர் இறக்குமதிக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி மத்திய அரசு பரிசீலனை
சீன ரப்பர் இறக்குமதிக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி மத்திய அரசு பரிசீலனை
ADDED : நவ 12, 2025 11:25 PM

புதுடில்லி: சீனாவிலிருந்து அளவுக்கதிகமாக இறக்குமதியாகும் ரப்பர் பொருட்களுக்கு பொருட்குவிப்பு தடுப்பு வரி விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
சைக்கிள் டயர் டியூப்கள், கார் உள்ளிட்ட வாகன டயர்கள், விவசாய வாகன டயர்கள் ஆகியவற்றில் கன்வேயர் பெல்ட்டுகள், விளையாட்டு சாதன தயாரிப்பில் ஹாலோ ஐசோபுட்டன், ஐசோபிரேன் ரப்பர் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. இதர துறைகளிலும் இவற்றின் பயன்பாடு உள்ளது.
இவற்றை சீனாவிலிருந்து அளவுக்கதிகமாக இறக்குமதி செய்து இந்தியாவில் குவிப்பதால் உள்நாட்டு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படுவதாக மத்திய அரசிடம் ரிலையன்ஸ் சிபூர் எலாஸ்டோமர்ஸ் நிறுவனம் புகார் அளித்திருந்தது. இறக்குமதி குவிப்பை கட்டுப்படுத்த பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தது.
இதை விசாரித்த வர்த்தக தீர்வுகளுக்கான இயக்குநர் ஜெனரல் அலுவலகம், இறக்குமதி குவிப்பு நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பது தெரிய வருவதால், நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பொருள் குவிப்பு தடுப்பு வரிவிதிக்க அந்த அலுவலகம் பரிந்துரை செய்யும். இருப்பினும், அவ்வரி விதிப்பை நிதி அமைச்சகம்தான் முடிவு செய்யும்.

