ஐ.ஆர்.இ.டி.ஏ., கடன் பத்திரங்களுக்கு வரி விலக்கு வழங்கியது மத்திய அரசு
ஐ.ஆர்.இ.டி.ஏ., கடன் பத்திரங்களுக்கு வரி விலக்கு வழங்கியது மத்திய அரசு
UPDATED : ஜூலை 11, 2025 12:25 AM
ADDED : ஜூலை 11, 2025 12:14 AM

புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த ஐ.ஆர்.இ.டி.ஏ., எனும் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் வெளியிடும் கடன் பத்திரங்களுக்கு, மத்திய அரசு வரி விலக்கு அறிவித்துள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு குறைந்த செலவில் நிதி திரட்ட ஏதுவாக, முதலீட்டாளர்களின் மூலதன ஆதாயம் மீதான வரியில் இருந்து விலக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. வருமான வரி சட்டம் 1961, பிரிவு 54 இ.சி.,யின் கீழ் இந்த விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நடைமுறை கடந்த 9ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக, மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிக்கையை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐ.ஆர்.இ.டி.ஏ.,வால் வெளியிடப்படும் கடன் பத்திரங்கள், நீண்ட கால சொத்துக்கள் என அதில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, ஐந்தாண்டுகள் கழித்து புதுப்பித்துக் கொள்ளும் வகையிலான ஐ.ஆர்.இ.டி.ஏ., கடன் பத்திரங்களுக்கும், ஜூன் 9ம் தேதி முதல் வெளியிடப்பட உள்ள பத்திரங்களுக்கும் வரி விலக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பசுமை எரிசக்தி துறையில் முதலீட்டை ஈர்க்கும் நோக்கில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பின்னணி
* கடந்த 2021 காலநிலை மாநாட்டில், இந்தியா ஐந்து உறுதிமொழிகளை அறிவித்தது
* 2030க்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைவது
* எரிசக்தி தேவையில் 50 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இருந்து பெறுவது
* 100 கோடி டன் கார்பன் உமிழ்வை குறைப்பது
* ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், கார்பன் உமிழ்வை 45 சதவீதம் குறைப்பது
* 2070க்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு என்ற இலக்கை அடைவது.