ADDED : அக் 15, 2024 10:30 PM

புதுடில்லி:'ஏர் பியூரிபையர்' எனப்படும் காற்று சுத்திகரிப்பான் தயாரிப்புகள் குறித்த விளம்பரங்கள், வாக்குறுதிகளின் உண்மைத்தன்மை குறித்து கண்காணிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டில்லியில், இதுகுறித்து மத்திய நுகர்வோர் விவகாரத் துறைச் செயலர் நிதி காரே கூறியதாவது:
காற்று சுத்திகரிப்பான் கருவிகள் குறித்து தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிடும் தகவல்களை அரசு கண்காணிக்கும். இந்த விஷயத்தை இந்திய தரச்சான்று அமைப்பான பி.ஐ.எஸ். கவனத்தில் கொண்டுள்ளது.
தயாரிப்பாளர்கள் தெரிவிக்கும் தகவல்கள், கருவியின் தரத்துடன் பொருந்திப் போகிறதா என்றும்; உண்மைக்கு மாறான வாக்குறுதி வழங்கப்படுகிறதா என்றும் பரிசோதிக்கப்படும்.
தரக்கட்டுப்பாட்டு பரிசோதனைகளுடன் ஒத்துப்போகாத தயாரிப்புகள் விற்பனையை தடை செய்வது குறித்து, தரச்சான்று அமைப்பின் பரிந்துரையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏர் பியூரிபையர் சாதன தயாரிப்பாளர்கள், தங்கள் தயாரிப்பு குறித்து தவறான வாக்குறுதிகளை வெளியிடுவதாக, மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி குற்றஞ்சாட்டினார். உலக தரநிர்ணய நாளை முன்னிட்டு, டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “காற்று சுத்திகரிப்பான் பற்றி எழுத்து வடிவில் ஏராளமாக சொல்கின்றனர்; ஆனால், உண்மையில் அதில் ஒன்றும் இருப்பதில்லை, சாதாரண விசிறிதான் உள்ளே இருக்கிறது,” என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், பி.ஐ.எஸ்., மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை இந்த விவகாரத்தில் தன் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.