'ரசாயன தொழில் துறை சந்தை ரூ.24.90 லட்சம் கோடியாக உயரும்'
'ரசாயன தொழில் துறை சந்தை ரூ.24.90 லட்சம் கோடியாக உயரும்'
ADDED : ஜன 25, 2024 12:43 AM

சென்னை:''பொருளாதார வளர்ச்சிக்கு, முக்கியமான துறைகளில் ரசாயன துறையும் ஒன்றாக விளங்குகிறது,'' என, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன நிர்வாக இயக்குனர் அரவிந்த் குமார் தெரிவித்தார்.
இந்திய ரசாயன கவுன்சில், 'பிக்கி' எனப்படும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு, மணலி தொழிற்சாலைகள் கூட்டமைப்பு, இந்திய ரசாயன தொழிற்சாலை கூட்டமைப்பு சார்பில், 'வேதியியல் துறைக்கான வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்' மாநாடு, சென்னை கிண்டியில் நேற்று நடந்தது.
அதில், 'பிக்கி' அமைப்பின் தமிழக கவுன்சில் தலைவர் ஜி.எஸ்.கே.வேலு பேசியதாவது:
இந்தியாவின் ரசாயன தொழில் துறையின் சந்தை தற்போது, 14.94 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது, வரும் 2030ல், 24.90 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு ரசாயனங்கள், இந்தியாவில் வலுவான வளர்ச்சியை பதிவு செய்யும் துணை துறைகளில் ஒன்றாக உள்ளது.
'மேக் இன் இந்தியா, ஆத்மநிர்பார்' திட்டங்கள், அந்த துறையில் அதிக முதலீட்டிற்கு வழிவகுத்து உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
சி.பி.சி.எல்., எனப்படும் சென்னை பெட்ரோலியம் நிர்வாக இயக்குனர் அரவிந்த் குமார் பேசியதாவது:
பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு, ரசாயன துறை மிக முக்கியமான துறைகளில் ஒன்று.
இந்த துறை, பல்வேறு துறைகளுக்கு சேவை செய்கிறது.
இந்தியாவில் இருந்து, 175 நாடுகளுக்கு ரசாயனங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது, நாட்டின் மொத்த ஏற்றுமதியில், 13 சதவீதம்.
வாய்ப்புகள் ஏராளமாக இருந்தாலும், வளர்ச்சி பாதையில் தான் உள்ளது.
ரசாயன தொழில் துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், ரசாயன தொழிலின் வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தை வடிவமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.