தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி, இங்கிலாந்துக்கு பயணம் முதல்வர் ஸ்டாலின் தகவல்
தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி, இங்கிலாந்துக்கு பயணம் முதல்வர் ஸ்டாலின் தகவல்
ADDED : ஆக 13, 2025 11:27 PM

சென்னை:“தமிழகத்துக்கு முதலீடு களை ஈர்க்க, செப்டம்பரில் வெளிநாடு செல்ல உள்ளேன். தமிழகத்தின் வளர்ச்சி, பிற வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உயரும்,'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை அறிவாலயத்தில், நடந்த கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க, கடந்த ஆண்டுகளில், துபாய், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு, பயணம் செய்தேன்.
முதலீட்டாளர்களுடன் பேசியதன் விளைவாக, தமிழகத்திற்கு 10 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் கொண்டு வரப்பட்டு, பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களை துவங்கி உள்ளன.
அதன் காரணமாக, 30 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெருகி உள்ளது.
இதற்கான சாட்சி தான், இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி விகிதம். மத்திய அரசு வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய, ஒரே மாநிலம் தமிழகம் தான்.
அடுத்த மாதம் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு, சுற்றுப்பயணம் சென்று முதலீடுகளை ஈர்த்து வர உள்ளேன். வரும் நாட்களில், தமிழகத்தின் வளர்ச்சி, பிற வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உயரும்.
இவ்வாறு அவர் கூறினார்.