ராமநாதபுரத்தில் மிளகாய் விவசாயிகள் தொழில் நிறுவனங்களுடன் இணைப்பு
ராமநாதபுரத்தில் மிளகாய் விவசாயிகள் தொழில் நிறுவனங்களுடன் இணைப்பு
UPDATED : அக் 04, 2025 12:56 AM
ADDED : அக் 04, 2025 12:49 AM

சென்னை:ராமநாதபுரம் மாவட்டத்தில், 750 மிளகாய் விவசாயிகளையும், மிளகாயில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் மூன்று தொழில் நிறுவனங்ளையும், டி.என்.எபெக்ஸ்., நிறுவனம் இணைத்துள்ளது.
![]() |
வேளாண் பொருட்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கவும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் இரு தரப்பினரையும் இணைத்து, வேளாண் மதிப்பு தொடரை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
அதன்படி தற்போது, மாம்பழம், வாழை, கொய்யா, தக்காளி, மிளகாய், மீன் ஆகியவற்றின் உற்பத்தி, பதப்படுத்துதல், பிராண்டிங், சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட மதிப்பு தொடர்களை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் மிளகாய்க்கு விவசாயிகள், நிறுவனங்களை இணைத்து, மதிப்பு சங்கிலி உருவாக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் மிளகாய் சாகுபடி அதிகம் உள்ளது. ராமநாதபுரம் மிளகாயின் காரத்தன்மை தனித்துவமானது. விவசாயிகளிடம் இருந்து இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு மிளகாய் வாங்கி, அவற்றை மதிப்பு கூட்டி விற்கும் நிறுவனங்களிடம் அதிக விலைக்கு விற்கின்றனர். இதனால், விவசாயிகளுக்கு அதிக விலை கிடைப்பதில்லை.
எனவே, ராமநாதபுரத்தில் மிளகாய் சாகுபடியில் ஈடுபட்டுள்ள, 500 - 750 விவசாயிகள், மிளகாயை பதப்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் மூன்று நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக ஆண்டுக்கு, 500 டன் மிளகாய் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.