ஏற்றுமதி வரியை அதிகரித்தது சீனா அலுமினியம் விலை உயரும் அபாயம்
ஏற்றுமதி வரியை அதிகரித்தது சீனா அலுமினியம் விலை உயரும் அபாயம்
ADDED : நவ 25, 2024 12:58 AM

புதுடில்லி:அலுமினியப் பொருட்கள் ஏற்றுமதிக்கான வரிச்சலுகையை, வரும் டிசம்பர் முதல் சீனா ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதனால், வினியோகம் குறையும் என்ற கவலை காரணமாக, சர்வதேச சந்தையில் அலுமினியத்தின் விலை உயர வாய்ப்புள்ளதாக, பி.எம்.ஐ., நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சந்தை பகுப்பாய்வு நிறுவமான பிட்ச் குழுமத்தை சேர்ந்த பி.எம்.ஐ., வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பாண்டுக்கான அலுமினியத்துக்கான விலை முன்கணிப்பை, டன் ஒன்றுக்கு 2,400 அமெரிக்க டாலரில் இருந்து, 2,450 டாலராக அதிகரித்து உள்ளோம். தேவை, வினியோகத்தை பொறுத்து, தற்போதைய சராசரியில் இருந்து விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
கடந்த நவ.,7ம் தேதி, லண்டன் உலோக சந்தையில், அலுமினியத்தின் விலை, டன் ஒன்றுக்கு 2,710 டாலராக அதிகரித்தது. தற்போது, டன் ஒன்றுக்கு 2,625 டாலராக உள்ளது.
அலுமினியத்தின் விலை, இந்தாண்டு இதுவரை 10 சதவீதமும், கடந்தாண்டோடு ஒப்பிடுகையில், 18 சதவீதம் அளவுக்கு உயர்ந்து காணப்படுகிறது.
சமீபத்திய வாரங்களில், அலுமினியத்தின் விலை மீண்டும் உயர்வதை காண முடிகிறது. இதற்கு மூலப்பொருட்கள் சந்தையில் வினியோகம் குறித்த கவலைகள் அதிகரித்து வருவது, பரந்துபட்ட பொருளாதார மேம்பாடுகள் ஆகிய இரண்டும் முக்கிய காரணங்களாகும்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளது.
இது குறித்து உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
உலகளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்களான சோலார் பேனல், மின் வாகனங்கள் மற்றும் மின் சேமிப்பகங்கள் கட்டமைப்பு களுக்கான தேவை தொடர்வதால், அலுமினியத்திற்கான தேவை மாற்றமின்றி தொடருமென எதிர்பார்க்கப்படுகிறது.
அலுமினியத்தின் தேவை மாறாமல் இருக்கும் பட்சத்தில், நடப்பாண்டு அலுமினியத்தின் விலை 10 சதவீதம் அதிகரித்த பின்னர், 2025ல் நிலையாக இருக்கும்; 2026க்கு முன்னதாக 4 சதவீதம் அளவுக்கு விலை உயரும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளது.
உலகளாவிய தேவை, கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், 3.20% அதிகரிப்பு
நடப்பு ஆண்டில் உலகின் அலுமினிய தேவை, 70.35 மில்லியன் டன்களாக உள்ளது