கோவையில் புத்தொழில் மாநாடு பிரத்யேக செயலி வெளியீடு
கோவையில் புத்தொழில் மாநாடு பிரத்யேக செயலி வெளியீடு
ADDED : செப் 26, 2025 01:28 AM

கோவை:கோவை 'கொடிசியா' வளாகத்தில், அக்., 9, 10ல், 'டி.என்., ஸ்டார்ட் அப்' எனப்படும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில், 'உலக புத்தொழில் மாநாடு 2025' நடக்கிறது. இம்மாநாட்டுக்கான செயலியை, தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் நேற்று வெளியிட்டார்.
உலக ஸ்டார்ட் அப் மாநாடு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம், கோவையில் நேற்று நடந்தது. அதில், அமைச்சர் அன்பரசன், டி.என்.ஜி.எஸ்.எஸ்., என்ற மாநாட்டு செயலியை வெளியிட்டு பேசியதாவது:
தமிழகத்தில் ஸ்டார்ட் அப் நிறுவன வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான திட்டங்களை தொலைநோக்கோடு முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இந்தியாவிலேயே உலக புத்தொழில் மாநாடு முதன்முறையாக தமிழகத்தில், அதுவும் கோவையில் நடக்கிறது.
இதன் வாயிலாக, தமிழகத்தை ஸ்டார்ட் அப் வளர்ச்சியில், அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இம்மாநாட்டில், 39 நாடுகளைச் சேர்ந்த 264 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். 30,000த்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் வருகின்றனர். மத்திய அரசின் 10 துறைகள், 10 மாநிலங்களைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் சார்ந்த நிறுவனங்கள், தமிழகத்தில் இருந்து 15 துறைகள் பங்கேற்கின்றன.
வளாகத்தில் 750- அரங்குகள் இடம்பெறுகின்றன; 315 நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன.