ADDED : மே 25, 2025 12:36 AM

கிரெடிட் கார்டு செலவு
கடந்த ஏப்ரலில், கிரெடிட் கார்டுகள் வாயிலான செலவுகள் 1.84 லட்சம் கோடி ரூபாயாக
அதிகரித்ததாக, ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. இது கடந்த ஆண்டின் ஏப்ரலைக் காட்டிலும் 18 சதவீதம் அதிகம். மாதங்களின் அடிப்படையில், மார்ச் மாத கிரெடிட் கார்டு செலவுகளுடன் ஒப்பிடுகையில் 8.70 சதவீதம் குறைவு. மார்ச்சில், கிரெடிட் கார்டுகள் வாயிலான செலவுகள், நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு 2.01 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
எல்.ஐ.சி., கின்னஸ் சாதனை
24 மணி நேரத்தில் அதிக ஆயுள் காப்பீடு திட்டங்களை விற்ற நிறுவனம் என்ற கின்னஸ் சாதனையை எல்.ஐ.சி., படைத்துள்ளது. எல்.ஐ.சி.,யின் துவக்க தினமான கடந்த ஜனவரி 20ம் தேதி நாடு முழுதும் 4.53 லட்சம் எல்.ஐ.சி., ஏஜன்ட்கள் 5,88,107 காப்பீடுகளை விற்றதாக எல்.ஐ.சி., தெரிவித்துள்ளது. கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் நிறுவனம் இதை உறுதிப்படுத்தி உள்ளது.
கடல் உணவு ஏற்றுமதி
நாட்டின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, கடந்த ஏப்ரல் மாதத்தில் 17.81% அதிகரித்து, 4,981 கோடி ரூபாயாக இருந்தது என, மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் கடல் உணவுப் பொருட்களைஅதிகம் இறக்குமதி செய்யும் நாடான அமெரிக்கா, பரஸ்பர வரி விதிப்பதாக அறிவித்து, தற்போது நிறுத்தி வைத்துள்ள நிலையில் ஏற்றுமதிகள் பாதிக்கப்படவில்லை என்றே தெரிகிறது. இந்தியா, உலகளவில் கடல் உணவுப் பொருட்கள் உற்பத்தியில் நான்காவது பெரிய நாடாக விளங்குகிறது.
புளூ வாட்டர் லாஜிஸ்டிக்ஸ் ஐ.பி.ஓ.,
சரக்கு போக்குவரத்து தளவாட சேவைகளை வழங்கி வரும் புளூ வாட்டர் லாஜிஸ்டிக்ஸ், ஐ.பி.ஓ., வாயிலாக 40.50 கோடி ரூபாயை திரட்ட உள்ளது. பங்கு ஒன்றின் விலை 132 -- 135 ரூபாயாக நிர்ணயித்து உள்ளது. வரும் 27 முதல் 29ம் தேதி வரை முதலீட்டாளர்கள், குறைந்தபட்சம் 1,000 பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம். இதன் வாயிலாக திரட்டப்படும் தொகையில், 10.51 கோடி ரூபாயை மூலதன செலவின தேவைகளுக்கும், 20 கோடி ரூபாயை நடப்பு மூலதனமாகவும் பயன்படுத்த உள்ளது.