ADDED : ஜூலை 10, 2026 02:49 AM

3,800 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஹோண்டா
ஜப்பானின் ஹோண்டா மோட்டார் நிறுவனத்தின் இருசக்கர வாகன பிரிவான, ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் வரும் 2028ம் ஆண்டுக்குள் 3,800க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளை இந்தியாவில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் வருடாந்திர ஒட்டுமொத்த இருசக்கர வாகன உற்பத்தி திறனை 80 லட்சமாக விரிவுபடுத்தும் நோக்கில் இந்த உட்கட்டமைப்பு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சுட்சுமு ஒடானி தெரிவித்துள்ளார்.
ஹைதராபாதில் அறிமுகமானது'யூடிரைவோ' மொபைல் செயலி
காரோட்டிகளை நிமிட கணக்கிலான கட்டண அடிப்படையில் வாடகைக்கு அமர்த்தும் இந்தியாவின் முதலாவது மொபைல் செயலியான 'யூடிரைவோ' ஹைதராபாதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதுமையான தளம் வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையான தீர்வை வழங்குகிறது. இதன் வாயிலாக வாடிக்கையாளர்கள் தகுதியான ஓட்டுநர்களை சில நிமிடங்களில் முன்பதிவு செய்ய முடியும் என்பதுடன், அவர்கள் காரை ஓட்டும் துல்லியமான நேரத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதுமானது.
பேயர் கிராப்சயின்ஸ் பங்குகளை கையகப்படுத்தியது பேயர் ஏ.ஜி.,
ஜெர்மனியை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான பேயர் ஏ.ஜி., இந்தியாவின் பேயர் கிராப்சயின்ஸ் நிறுவனத்தில் இருந்த கிட்டத்தட்ட 11.9 சதவீத பங்குகளை கையகப்படுத்தியுள்ளது. தேசிய பங்கு சந்தை தரவுகளின்படி, இந்த மிக பெரிய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 2,207 கோடி ரூபாய் ஆகும். இந்த முதலீடானது, இந்தியாவின் வளர்ந்து வரும் வேளாண் வினியோக கட்டமைப்பு மற்றும் சந்தை மீது சர்வதேச நிறுவனங்களுக்கு உள்ள நம்பிக்கையை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மின் உற்பத்தி ஆலையை அமைக்கும் நால்கோ - என்.எல்.சி.,
பொதுத்துறை நிறுவனங்களான நால்கோ மற்றும் என்.எல்.சி., இந்தியா ஆகியவை இணைந்து, ஒடிஷாவில் 1,080 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையத்தை கட்டமைப்பதற்காக 12,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளன. இந்த மிக பெரிய கூட்டுத் திட்டம், நால்கோ நிறுவனத்தின் அலுமினியம் உருக்காலை விரிவாக்கத்திற்கு தேவையான தடையற்ற மின்சாரத்தை வினியோகிப்பதுடன், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் நீண்டகால நிலக்கரி வினியோக கட்டமைப்பையும் ஒருங்கிணைக்க உதவும்.
என்.ஐ.ஐ.எப்.,பில் ரூ.2,290 கோடிமுதலீடு செய்த ஆஸ்திரேலிய நிதியம்
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பென்ஷன் நிதிய அமைப்பான 'ஆஸ்திரேலியன்சூப்பர்', இந்தியாவிலுள்ள என்.ஐ.ஐ.எப்., எனப்படும் தேசிய உட் கட்டமைப்பு மற்றும் முதலீட்டு நிதியத்தில் 2,290 கோடி ரூபாய் புதிய முதலீட்டை மேற்கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய முதலீடு வாயிலாக, அந்த பென்ஷன் நிதியத்தின் ஒட்டுமொத்த இந்திய முதலீட்டு மதிப்பு 21,842 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
