ADDED : ஜூலை 21, 2026 06:59 AM

தெலுங்கானாவில் பாமாயில் ஆலை வளாகம் தொடங்கியது கோத்ரெஜ்
கோத்ரெஜ் அக்ரோவெட் நிறுவனம், தெலுங்கானாவின் கம்மம் பகுதியில் நாட்டின் முதலாவது ஒருங்கிணைந்த ஆயில் பாம் வளாகத்தை தொடங்கியுள்ளது. பாமாயில் தயாரிப்பின் அனைத்து கட்டத்தையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் இந்த அதிநவீன உள்கட்டமைப்பு, உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுரங்க நிறுவனங்களிடம் ஆர்டர் பெற்ற எல் அண்டு டி
எல் அண்டு டி நிறுவனம், முக்கிய பொதுத்துறை மற்றும் தனியார் உலோகங்கள் மற்றும் சுரங்க நிறுவனங்களிடமிருந்து பல புதிய ஆர்டர்களை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இரும்பு தாதுவை கையாளுதல், ஸ்டீல் ஆலை விரிவாக்கம் உள்ளிட்ட இந்த புதிய ஒப்பந்தங்களின் மதிப்பு 10,000 - 15,000 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
போர் விமான என்ஜின் நுட்பத்தில் 'பெனினியன்' முக்கிய மைல்கல்
பெனினியன் இந்தியா என்ற தனியார் நிறுவனம் தங்களின் புதிய 'யந்துார் 4.5 கி.என்.,' டர்போபேன் என்ஜின் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் வாயிலாக, உள்நாட்டிலேயே போர் விமான என்ஜின் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் இந்நிறுவனம் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இது, நம் நாட்டின் முதல் தனியார் டர்போபேன் என்ஜின் ஆகும்.
சென்னை நிறுவனத்தின் மின்சார விமானம் அறிமுகம்
சென்னையை தலைமையிடமாக கொண்ட இ - பிளேன் ஸ்டார்ட்அப் நிறுவனம், தனது முழு அளவிலான முதல் எலக்ட்ரிக் விமானமான 'இ-200எக்ஸ்' மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் 2027 ஆண்டுக்குள் இதன் சோதனை ஓட்டங்களை நடத்தவும், 2028 ஆண்டுக்குள் வணிகரீதியான பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஹரியானா பசுமை மின் திட்டம் 'லெவன்' ரூ.4,700 கோடி முதலீடு
லெவன் குழுமம், ஹரியானாவின் குருகிராம் மற்றும் நுஹ் மாவட்டங்களில் டீசல் இல்லாத துாய்மையான மின்சாரத்தை வழங்குவதற்காக கிட்டத்தட்ட 4,700 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இத்திட்டம், ஹரியானா மாநில மின்சார துறையில் முன்மொழியப்பட்டுள்ள மிகப்பெரிய தனியார் உள்கட்டமைப்பு முதலீட்டு திட்டம் என கூறப்படுகிறது.
