பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய பதில்: ஏ.ஐ., நிறுவனங்களுக்கு புதிய வழிகாட்டல்
பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய பதில்: ஏ.ஐ., நிறுவனங்களுக்கு புதிய வழிகாட்டல்
ADDED : மார் 05, 2024 12:12 AM

புதுடில்லி : அனைத்து டிஜிட்டல் தளங்களும் அதன் ஏ.ஐ., அதாவது, 'ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்' எனும் செயற்கை நுண்ணறிவு செயலியை துவங்குவதற்கு முன்பு, மத்திய அரசிடம் இருந்து கட்டாயம் ஒப்புதல் பெற வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் 'கூகுள்' நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு செயலியான 'ஜெமினி' பிரதமர் நரேந்திர மோடி குறித்த கேள்விக்கு சர்ச்சைக்குரிய பதில் வழங்கியதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 1ம் தேதி அனுப்பப்பட்டுள்ள இந்த வழிகாட்டுதல்களில், டிஜிட்டல் தளங்கள், சோதனை அடிப்படையில் இயங்கி வரும் செயற்கை நுண்ணறிவு செயலிகள், சட்டத்துக்கு புறம்பான எந்த ஒரு செய்தியையும் வெளியிடாது என்பதை உறுதிபடுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதனை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான மற்றும் போலி செய்திகளை கட்டுப்படுத்த கூறி செயற்கை நுண்ணறிவு தளங்கள், செயலிகள் ஆகியவற்றுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சகம் ஏற்கனவே ஒரு வழிகாட்டுதலை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக மற்றொரு வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்ததாவது:
டிஜிட்டல் நிறுவனங்கள், தங்களது செயற்கை நுண்ணறிவு செயலி தவறான தகவல்களை வழங்கும்பட்சத்தில், அது சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டு வருவதாகக் கூறி, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது.
எனவே, அந்த குறிப்பிட்ட செயலி சோதனை முறையில் தான் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறித்தும், தவறான தகவல்களை வழங்கக்கூடும் என்றும் பொதுமக்களுக்கு முன்பே தெரியப்படுத்த வேண்டும் என தற்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் போதுமான பாதுகாப்புத் தடுப்புகள் இல்லாமல், தங்கள் தயாரிப்புகளை இணையத்தில் வெளியிடுவதை அரசு விரும்பவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூகுள் 'ஜெமினி' பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய பதில் வழங்கியதை தொடர்ந்து புதிய வழிகாட்டல்
வழிகாட்டலை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை
சேவையை துவங்குவதற்கு முன்பு, மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் கட்டாயம் தேவை
சோதனை முறையில் இயக்கப்பட்டால் அதை பொதுமக்களுக்கு முன்பே தெரியப்படுத்த வேண்டும்

