ADDED : ஏப் 08, 2025 06:39 AM

புதுடில்லி; கிரெடிட் கார்டு கடன் நிலுவை, கடந்தாண்டு 28 சதவீதம் உயர்ந்து 6,742 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நுகர்வோர் செலவழிப்பு மற்றும் டிஜிட்டல் பேமென்ட்ஸ் பயன்பாடு அதிகரித்துள்ளதால், கடந்த மூன்று ஆண்டுகளில், கிரெடிட் கார்டு பயன்படுத்துவதும் அதிகரித்துள்ளது. அதற்கு இணையாக, உரிய காலத்துக்குள் திருப்பிச் செலுத்தப்படாத கிரெடிட் கார்டு கடன்களும் அதிகரித்துள்ளன.
கடந்த 2023 டிசம்பர் மாதம் 5,250 கோடி ரூபாயாக இருந்த திருப்பிச் செலுத்தப்படாத கடன், கடந்தாண்டு டிசம்பரில் 28.42 சதவீதம் உயர்ந்து 6,742 கோடி ரூபாயாகியுள்ளது. ஓர் ஆண்டில் கிரெடிட் கார்டு நிலுவை, கிட்டத்தட்ட 1,500 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
வங்கிகள் தங்களின் ஒட்டுமொத்த வாராக் கடனின் அளவை 2023ல் 5 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, கடந்தாண்டு 4.55 லட்சம் கோடி ரூபாயாக குறைத்துள்ள நிலையில், கிரெடிட் கார்டு வாராக் கடன்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளன.
கடந்த நான்கு ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தப்படாத கிரெடிட் கார்டு கடன்களின் அளவு 500 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களது கிரெடிட் கார்டு நிலுவையை உரிய நேரத்தில் செலுத்த தவறும்பட்சத்தில், வங்கிகள் அந்த நிலுவை தொகைக்கு, ஆண்டு ஒன்றுக்கு 42 முதல் 46 சதவீதம் வரை வட்டி வசூலிப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுமட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களின் கிரெடிட் ஸ்கோரும் குறைவதால், அவர்களின் கடன் பெறும் திறனும் பாதிக்கப்படுகிறது.
கிரெடிட் கார்டு கடன்
2023 ரூ.2.53 லட்சம் கோடி
2024: ரூ.2.92 லட்சம் கோடி
திருப்பி செலுத்தாத கடன்களின் பங்கு:
2023: 2.06%
2024: 2.30%