ADDED : மார் 19, 2024 10:04 AM

புதுடில்லி: இணைய தாக்குதல்களின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறும், அத்தகைய அபாயங்களைக் குறைக்க பாதுகாப்பை பலப்படுத்துமாறும், வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டு உள்ளது.
ரிசர்வ் வங்கி, சமீபத்தில் 'சைபர் செக்யூரிட்டி' தொடர்பாக ஆய்வுக்கூட்டம் ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் எங்கெல்லாம் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதோ, அவற்றை நிவர்த்தி செய்ய வங்கிகளுக்கு செயல் திட்டங்கள் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில் பங்கேற்ற வங்கி அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “வங்கிகளின் இணைய பாதுகாப்புத் திறன்களில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிய ரிசர்வ் வங்கி தனி ஆய்வு நடத்துகிறது. இந்த முறை, அவர்கள் எங்களைச் சந்தித்து, குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டிய செயல் திட்டங் களைத் தந்துள்ளனர்,” என்று தெரிவித்தார்.
புதிய இணைய பாதுகாப்பு அபாயங்களை எதிர்கொள்ள வங்கித் துறை தயாராக இருக்க வேண்டும் என்று, சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ரபி சங்கர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

